(Source: ECI/ABP News/ABP Majha)
மகள் படிக்கணும்.. படிப்புக்காக இரவெல்லாம் பலூன் விற்கும் தந்தையும் மகளும்! மனதை தொட்ட கதை!
வாழ்க்கை கடினமாக இருந்தாலும், தந்தை தன் மகளுக்கு அன்பை அள்ளிக் கொடுக்கிறார். தந்தை மகளை பற்றிக்கொள்கிறார், மகள் பொம்மையை பற்றிக்கொள்கிறார்… அவர்கள் இருவருமே அவசியமான விஷயங்களைப் பற்றிக் கொள்கிறார்கள்!
மகளின் படிப்பு செலவுக்காக, சீனாவில் இரவு நேரங்களில் பலூன் பொம்மைகளை விற்கும் வீடற்ற தந்தையும் அவரது ஐந்து வயது மகளும் ஆயிரக்கணக்கான நெட்டிசன்களின் இதயங்களைத் தொட்டுள்ளனர்.
பலூன் விற்கும் தந்தை மகள்
அந்த சிறுமி வழக்கமாக இளஞ்சிவப்பு நிற ஆடை ஒன்றை அணிந்து, வாங்குபவர்களை கவர சில பாலூன்களை ஊதி தன் மீது அணிந்து வியாபாரம் செய்கிறார். அவளுடைய தந்தை பலூன் பொம்மைகளால் அவர்களின் பெட்டியை அலங்காரம் செய்து வியாபாரம் செய்கிறார். இவர்கள் இருவரும் இரவில் 2 முதல் 3 மணி வரை பலூன் விற்பனை செய்கின்றனர். பகல் நேரத்தில் மரத்தின் நிழலில் தூங்குகிறார்கள். அவர்களின் பையில் அவர்களுடைய துணி மற்றும் அன்றாடத் தேவைகள் வைத்திருக்கின்றனர். மேலும் பலூன் பொம்மைகள் செய்யத் தேவையான பொருட்கள் ஆகியவற்றையும் அதில்தான் எடுத்துச் செல்கின்றனர்.
வீடியோ வெளியீடு
இந்த தந்தை மகள் மத்திய சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் உள்ள Xuchang பகுதியை சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தந்தை மற்றும் மகளின் வீடியோ சீன சமூக ஊடக தளமான Douyin இல் வைரலாகி வருகிறது. வாங் என்ற பெயர் கொண்ட பெண் ஒருவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். வீட்டிற்கு செல்லும் வழியில் நின்று பலூன் வாங்கிய போது அவர்களை சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறை
எனது குடும்பத்தில் தானும் தனது மகளும் மட்டுமே எஞ்சியிருப்பதாக அந்த தந்தை கூறினார். குழந்தையை பார்த்துக்கொள்ள உதவுவதற்கு வீட்டில் யாரும் இல்லாததாலும், சிறுமியின் மழலையர் பள்ளிக்கு கோடை விடுமுறையில் என்பதாலும், அவர் தனது மகளை தன்னுடனே அழைத்துச் செல்ல வேண்டிய சூழலில் உள்ளார் என்ற தகவலை வாங் தெரிவித்துள்ளார்.
பலூன் ஃபாதர்
இவரை நெட்டிசன்கள் 'பலூன் ஃபாதர்' என்று அழைக்கிறார்கள். இதற்கு முன்னதாக இவர், கட்டுமானத் தளங்களில் பணிபுரிந்துள்ளார். அங்கு பணிபுரிந்ததற்காக ஆயிரக்கணக்கான யுவான்கள் (சீனாவின் பணம்) சம்பள பாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. "தன்னிடம் பணம் குறைவாக இருப்பதால் மலிவான வீட்டில் மட்டுமே தங்க முடியும். அந்த வீட்டில் ஏசி இல்லாமல் இருக்கும், சீனாவில் அடிக்கும் வெயிலுக்கு அது போன்ற வீட்டில் இருப்பதை விட மரத்தடிகளில் தங்குவது மேல் என்று முடிவெடுத்தேன். அதுமட்டுமின்றி நான் வீட்டில் இல்லாத நேரத்தில் மகள் தனியாக இருப்பதையும் நான் விரும்பவில்லை", என்று அவர் கூறியதாக வாங் கூறினார். இந்த பலூன் தந்தையின் மகள் நெட்டிசன்களின் மனதை கவர்ந்துள்ளார். அவர்கள் நிலை என்னவாக இருந்தாலும் சோர்வடையாமல் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதுகுறித்து வாங் பேசும்போது, "வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும், தந்தை தன் மகளுக்கு எல்லா அன்பையும் கொடுக்கிறார். அந்த தந்தை மகளை பற்றிக்கொள்கிறார், மகள் பொம்மையை பற்றிக்கொள்கிறார்… அவர்கள் இருவருமே தங்களுக்கு அவசியமான விஷயங்களைப் பற்றிக் கொள்கிறார்கள்", என்று எழுதி இருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்