வீடே இல்லை.. ஆனால் இத்தனை உறவினர்... காருக்குள் 47 பூனைகளுடன் வாழும் நபருக்கு குவியும் அன்பு..
நமக்கு வீடில்லை என்றால் நம்மை நாம் சுமப்பதே சுமையாகிவிடும். ஆனால், கருணை உள்ளம்கொண்ட இந்த நபர் தான் வீடிழந்தாலும் பூனைகளை இழக்க விரும்பவில்லை.
நமக்கு வீடில்லை என்றால் நம்மை நாம் சுமப்பதே சுமையாகிவிடும். ஆனால், கருணை உள்ளம் கொண்ட இந்த நபர் தான் வீடிழந்தாலும் பூனைகளை இழக்க விரும்பவில்லை. அதனால், தன்னுடைய காரில் தான் வளர்த்த 47 பூனைகளுடன் தஞ்சம் புகுந்தனர்.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தை சேர்ந்தவர் அந்த நபர். பல்வேறு பொருளாதார காரணங்களால் அவர் தனது வீடை இழக்க நேர்ந்துள்ளது. வீடிருந்தபோது அவர் தன்னுடன் 47 பூனைகளை வளர்த்து வந்துள்ளார். ஆனால் வீட்டை இழந்தவுடன் அந்த பூனைகளைக் கைவிட அவருக்கு மனமில்லை. பூனைகளில் சில பிறந்த குட்டிகள் சில 10, 12 வயது ஆனவை. அத்தனை பூனைகளையும் எடுத்துக் கொண்டு அவர் தனது காரில் குடி புகுந்தார். வெளியில் 47 டிகிரி வெயில் ஒரு காருக்குள் 47 பூனை அத்துடன் அந்த நபர். என்னதான் பூனை அளவில் சிறியது என்றாலும் கூட 47 பூனைகள் ஒரு காருக்குள் இருப்பது சாத்தியமில்லை தானே. உரிமையாளருடன் அந்தப் பூனைகளும் அட்ஜெஸ்ட் செய்து அடைக்கலம் புகுந்தன.
இதனை ஒரு காவலர் பார்த்துள்ளார். அவர் அந்த நபரிடம் நடந்ததை விசாரித்தார். பின்னர் பூனைகளுடன் காரை புகைப்படம் எடுத்து அதை அனிமல் ஹியூமேன் சொசைட்டி என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார்.
அந்தப் புகைப்படத்துடன் அவர் ஓர் நீண்ட பதிவையும் எழுதியுள்ளது அனிமல் ஹியூமேன் சொசைட்டி. ஜூன் மாத கொளுத்து வெயில், வியர்வையில் ஏசி வசதி இல்லாத காரில் ஒரு மனிதருடன் 47 பூனைகள். நினைத்துப் பாருங்கள் எப்படி இருந்திருக்கும் என்று. நல்ல வேளையாக நாங்கள் தலையிட்டு பூனைகளை மீட்டோம். அவற்றின் வயது 1 வயதுக்கும் கீழ் தொடங்கி 12 வயது வரை இருந்தன. அவற்றை நாங்கள் பாதுகாப்பாக பராமரிக்கிறோம். எல்லா பூனைகளுக்கும் தடுப்பூசி கொடுத்துள்ளோம். சத்தான ஆகாரம் கொடுக்க ஆரம்பித்துள்ளோம். சுகாதாரமற்ற, ஊட்டச்சத்தான உணவற்ற சூழலில் இருந்த பூனைகள் நீர்ச்சத்தை இழந்து வாட்டமாக உள்ளன. அவற்றிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. நேற்று நெருக்கடியில் தவித்த பூனைகள் இன்று ஆளுக்கொரு இடம் பார்த்து அமைதியாக சுகமாக தூங்குகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனிமல் ஹியூமேன் சொசைட்டிக்கு தாராளமாக யார் வேண்டுமானாலும் நிதி அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதே வேளையில், அந்தப் பூனைகளை துரத்திவிடாமல் ஏழ்மையிலும் தன்னுடன் தக்கவைத்திருந்த நபரையும் மீட்டு பராமரிப்பு இல்லத்துக்கு போலீஸார் அனுப்பியதாக அந்த ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நபருக்கு சமூக வலைதளத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது.