2 மாதத்தில் 4-வது முறையாக இந்து கோயில் சேதம்; சுவர் ஓவியத்தில் சர்ச்சை கருத்து - காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு தொடர்பு?
நான்காவது முறையாக இந்து கோயில் சேதப்பட்டுள்ளது. பிரிஸ்பேனில் உள்ள முக்கிய இந்து கோயிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
சமீப காலமாகவே, வெளிநாடுகளில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்து வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, கடந்த இரண்டு மாதங்களில் ஆஸ்திரேலியாவில் மூன்று இந்து கோயிகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
குறிவைக்கப்படும் இந்து கோயில்கள்:
இந்நிலையில், நான்காவது முறையாக இந்து கோயில் சேதப்பட்டுள்ளது. பிரிஸ்பேனில் உள்ள முக்கிய இந்து கோயிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் இன்று சேதப்படுத்தியுள்ளனர். பிரிஸ்பேனில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயண் கோயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து கோயில் தர்மகத்தா சதீந்தர் சுக்லா கூறுகையில், "கோயில் பூசாரி மற்றும் பக்தர்கள் இன்று காலை போன் செய்து, எங்கள் கோயிலின் சுவரில் நடந்த சேதம் குறித்து எனக்கு தெரியப்படுத்தினர்" என்றார்.
இது தொடர்பாக இந்து மனித உரிமைகள் இயக்குனர் சாரா கேட்ஸ் பேசுகையில், "குயின்ஸ்லாந்து காவல்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் தெரிவித்துள்ளோம். அவர்கள் கோயில் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக உறுதியளித்தனர்.
காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு தொடர்பு:
நீதிக்கான சீக்கியர்கள் என்ற அமைப்பு, உலகம் முழுவதும் இது போன்ற குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதே பாணியில் இப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இது ஆஸ்திரேலிய இந்துக்களை பயமுறுத்தும் முயற்சி என்பது தெரிய வருகிறது" என்றார்.
கோயில் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்து சமூகம் போராடுவதைப் போன்ற படத்தை சாரா கேட்ஸ் பின்னர் ட்வீட் செய்திருந்தார். இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு நிறைந்த சுவர் ஓவியங்களை கோவில் நிர்வாகத்துடன் சேர்ந்து மக்களுடன் சுத்தம் செய்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களிலேயே மூன்று இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது. விக்டோரியா மாகாணத்தில் மூன்றாவது இந்து கோயிலை காலிஸ்தானி ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர். கோயில்களை சேதப்படுத்தியது மட்டும் இன்றி இந்தியா நாட்டுக்கு எதிரான வாசகங்களை கோயிலின் சுவர்களில் அவர்கள் எழுதி சென்றதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகம், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மெல்போர்ன் ஆல்பர்ட் பார்க்கில் உள்ள இஸ்கான் கோயிலை சேதப்படுத்தி அதன் சுவர்களில் 'ஹிந்துஸ்தான் முர்தாபாத்' என அவர்கள் எழுதி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தூதரகம் கண்டனம்:
இசம்பவத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய தூதரகம், "சமீப வாரங்களில் மெல்போர்னில் உள்ள மூன்று இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களை இந்திய தூதரகம் கடுமையாக கண்டிக்கிறது. அமைதியான, பல நம்பிக்கைகளை கொண்ட, பல கலாச்சார இந்திய-ஆஸ்திரேலிய சமூகத்தினரிடையே வெறுப்பையும் பிரிவினையையும் விதைக்கும் தெளிவான முயற்சிகள் இது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய சமூகத்தினர் மற்றும் அவர்களது சொத்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் தேசிய நலனுக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளுக்கு ஆஸ்திரேலியப் பகுதியைப் பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்றும் ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது" என இந்திய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 16ஆம் தேதி, விக்டோரியாவில் உள்ள கேரம் டவுன்ஸில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சிவ விஷ்ணு கோயிலும் இதேபோல் சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.