போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்க தலைவரை கொன்றதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.
இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையேயான போரில் பெரும் திருப்பமாக ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்க தலைவரை கொன்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போரில் திருப்பம்: மேற்காசியாவில் ஹமாஸ் - இஸ்ரேலுக்கு இடையேயான போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கத்திற்கும் இடையே தினசரி மோதல் நடந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், லெபனானில் நடந்த பேஜர், வாக்கிடாக்கி உச்சக்கட்ட பதற்றத்தை உண்டாக்கியது.
இதற்கு இஸ்ரேலே காரணம் என சொல்லப்படுகிறது. இதையடுத்து, லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தின. இந்த நிலையில், ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் பாதுகாப்பு படை கொலை செய்துள்ளது.
வடக்கு இஸ்ரேலில் ராக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா இயக்கம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, ஹிஸ்புல்லாவின் கோட்டையாக கருதப்படும் கிழக்கு மற்றும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது.
ஹிஸ்புல்லா இயக்க தலைவர் கொலை:
குறிப்பாக, தெற்கு பெய்ரூட்டில் நேற்று இரவு முழுவதும் ஜெட் மூலம் குண்டுகளை வீசி இஸ்ரேல் தாக்கியது. இதனால் பல கட்டிடங்கள் தரைமட்டமானது. இந்த தாக்குதலில்தான் ஹிஸ்புல்லா இயக்க தலைவர் கொல்லப்பட்டுள்ளார்.
லெபனானில் பெரும் செல்வாக்கு படைத்தவர் நஸ்ரல்லா. குறிப்பாக, ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது. போரை முடிவு கொண்டு வர சமாதான பேச்சுவார்த்தை மேற்கொள்ள இவரே சரியான நபர் என கருதப்படுகிறார்.
Hassan Nasrallah will no longer be able to terrorize the world.
— Israel Defense Forces (@IDF) September 28, 2024
இவரின் மகளும் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெற்கு பெய்ரூட்டில் ஹிஸ்புல்லாவை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் நஸ்ரல்லாவின் மகள் ஜைனப் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
மத்திய கிழக்கில் அமைந்துள்ள லெபனான் நாட்டின் தெற்கு பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்ததற்கு எதிராக உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஹிஸ்புல்லா இயக்கம். கடந்த 1982ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அரசியல் இயக்கம் ஈரான் நாட்டின் ஆதரவுடன் இயங்கி வருகிறது. இந்த இயக்கத்திற்கு முக்கிய ஆதரவாக இருந்து வருவது ஷியா பிரிவு இஸ்லாமிய மக்கள் ஆவர்.