Hamas Vs Trump: ட்ரம்ப்பிடமே மாஸ் காட்டிய ஹமாஸ்; திட்டத்தில் எல்லா அம்சங்களையும் ஏற்கவில்லை; என்ன சொல்றாங்க.?
உலகத்தையே ஆட்டி வைக்கும் ட்ரம்ப்பிற்கே அல்வா கொடுத்துள்ளது ஹமாஸ். ஆம், அவர் முன்மொழிந்த 20 அம்ச திட்டத்தை அந்த அமைப்பு முழுமையாக ஏற்கவில்லை. சில அம்சங்களை மட்டுமே ஏற்பதாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-காசா போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு 20 அம்ச அமைதித் திட்டத்தை முன்மொழிந்தார். அதை இஸ்ரேல் மற்றும் பல அரபு நாடுகள் ஏற்ற நிலையில், ஹமாசிற்கு ட்ரம்ப் கெடு விதித்திருந்தார். நாளை அந்த கெடு முடிவடைய உள்ள நிலையில், அந்த திட்டத்தில் சில முக்கிய அம்சங்களை மட்டும் ஏற்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. ஹமாஸ் எந்தந்த அம்சங்களை ஏற்றது, எதை ஏற்கவில்லை.? பார்க்கலாம்.
20 அம்ச அமைதித் திட்டத்தை முன்மொழிந்த ட்ரம்ப்
கடந்த சில நாட்களுக்கு முன்னர், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்துப் பேசினார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. இந்த சந்திப்பிற்குப் பின், காசாவுக்கான தனது 20 அம்சத் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு நன்றி தெரிவித்தார். அதோடு, பாலஸ்தீன குழுவான ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை நிராகரித்தால், போராளிக் குழுவை அழிக்க இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் "முழு ஆதரவு" இருக்கும் என்று எச்சரித்தார்.
அதோடு, திட்டத்தை ஏற்க, ஹமாசிற்கு காலக் கெடு விதித்திருந்தார் ட்ரம்ப். ஆனால், திட்டத்தை நிராகரித்து சில திருத்தங்களை கோரியது ஹமாஸ். ஆனால் ட்ரம்ப் மீண்டும் எச்சரித்த நிலையில், திட்டத்தில் சில முக்கிய அம்சங்களை மட்டும் ஏற்பதாகவும், மற்ற அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் ஹமாஸ் கூறியுள்ளது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
- இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டால், ஹமாஸால் பிடிக்கப்பட்ட கடைசி பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை இஸ்ரேலிய படைகள் திரும்பப் பெறப்படும் போது, "போர் உடனடியாக முடிவடையும்" என்று 20 அம்சத் திட்டம் கூறுகிறது. அந்த ஆரம்ப காலகட்டத்தில், போர் நிறுத்தம் இருக்கும்.
- தற்காலிக சர்வதேச உறுதிப்படுத்துதல் படை மற்றும் ட்ரம்ப் தலைமையிலான ஒரு இடைநிலை அதிகாரத்தை உருவாக்குவது.
- இந்த ஒப்பந்தம், ஹமாஸ் போராளிகளை முழுமையாக நிராயுதபாணியாக்க வேண்டும் மற்றும் அரசாங்கத்தில் எதிர்கால பாதிரங்களில் இருந்து விலக்கப்பட வேண்டும். இருப்பினும், அமைதியான சகவாழ்வுக்கு ஒப்புக்கொண்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்.
- இஸ்ரேல் படைகள் திரும்பப் பெறப்பட்டபின், உதவி மற்றும் முதலீடுகளுக்காக எல்லை திறக்கப்படும்.
- ட்ரம்பின் முந்தைய வெளிப்படையான இலக்குகளிலிருந்து ஒரு முக்கியமான மாற்றமாக, பாலஸ்தீனியர்கள் வெளியேற நிர்பந்திக்கப்பட மாட்டார்கள். அதற்கு பதிலாக, "மக்கள் தங்குவதை ஊக்குவிப்போம். மேலும், சிறந்த காசாவைக் கட்டியெழுப்ப அவர்களுக்கு வாய்ப்பளிப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இப்படி, மொத்தம் 20 அம்சங்களை ட்ரம்ப் முன்மொழிந்திருந்தார்.
சில அம்சங்களுக்கு மட்டும் ஒப்புக்கொண்ட ஹமாஸ்
ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கியமான சில அம்சங்களை ஏற்றுக்கொள்வதாக நேற்று ஹமாஸ் அறிவித்தது. அதன்படி, அமைதித் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, உயிருடன் மற்றும் இறந்த பிணைக் கைதிகளை இஸ்ரேலிடம் ஒப்படைப்பதற்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளது.
அதேபோல், உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கும், இஸ்ரேல் படைகள் காசாவிலிருந்து முழுமையாக விலக்கிக் கொள்ளப்படுவதற்கும் வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும், காசாவிற்கு உடனடி மனிதாபிமான உதவி மற்றும் சீரமைப்பு முயற்சிகளையும் வரவேற்றுள்ளது.
ஆயுதங்களை கைவிட ஒப்புக்கொள்ளாத ஹமாஸ்
ட்ரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான, ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை முழுமையாக கைவிட வேண்டும் என்ற அம்சத்தை அந்த அமைப்பு ஏற்கவில்லை.
அது குறித்து விளக்கமளித்துள்ள ஹமாஸ், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு முடிவுக்கு வரும் வரை ஆயுதங்களை கைவிட முடியாது என அந்த அமைப்பின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், எதிர்காலத்தில் காசாவை நிர்வகிப்பதில் ஹமாசிற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் எந்த பங்கும் இருக்கக் கூடாது என்பதும் திட்டத்தின் ஒரு அம்சமாகும். ஆனால், இதற்கும் ஹமாஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.
திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமான, வெளிநாட்டு மேற்பார்வை என்பதையும் ஹமாஸ் ஏற்கவில்லை. மாறாக, தேசிய ஒருமித்த கருத்தின் அடிப்படையில், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் ஆதரவுடன், காசா பகுதியின் நிர்வாகத்தை பாலஸ்தீன சுதந்திர அமைப்பிடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும், விரிவான தேசிய கட்டமைப்பில் ஹமாஸ் ஒரு பகுதியாக இருக்கும் என்று கூறி, எதிர்கால ஆட்சியில் தனக்கான பங்கை விட்டுக்கொடுக்கவும் அந்த அமைப்பு மறுத்துள்ளது.
இதன் மூலம், போரை நிறுத்தவும், பிணைக் கைதிகளை விடுவிக்கவும் ஹமாஸ் தயாராக இருப்பதும், ஆயுதங்களையும், அதிகாரத்தையும் கைவிட முடியாது என்பதில் உறுதியாக இருப்பதும் தெரிகிறது. இதனால், மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ஹமாஸ் ஒப்புக்கொண்டவற்றை தாமதமில்லாமல் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று ம், தாமதத்தை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.





















