Vikram Misri US Visit: மத்தியஸ்த சர்ச்சைக்கு விடை கிடைக்குமா.? வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அமெரிக்கா பயணம்
வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்தியா - பாக். இடையே மத்தியஸ்தம் செய்ததாக ட்ரம்ப் கூறிய நிலையில், அதற்கு விடை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகளை அவர் சந்திக்க உள்ளார். இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது, அதற்கு மத்தியஸ்தம் செய்து மோதலை நிறுத்தியதாக ட்ரம்ப் கூறிவரும் நிலையில், மிஸ்ரியின் இந்த பயணத்தின்போது அதற்கு விடை கிடைக்குமா என் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ததாக கூறிய ட்ரம்ப்
காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
இதற்கு எதிர்வினையாற்றிய பாகிஸ்தான், எல்லைப் பகுதியில், பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கும் இந்தியா பதிலடி கொடுத்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதனால், பல உலக நாடுகளும் கவலையில் ஆழ்ந்ததையடுத்து, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள், மத்தியஸ்தம் செய்ய முன்வந்தன. ஆனால், இந்தியா அதை மறுத்துவிட்ட நிலையில், தொடர்ந்து முயன்ற அமெரிக்கா, இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி தாக்குதலை நிறுத்தியதாக, ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கம் மூலம் அறிவித்தார்.
இதனால் பெரும் சர்ச்சை எழுந்த நிலையில், இந்தியா அதை மறுத்தது. இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்திய நிலையில் பேசிய பிரதமர் மோடியும், அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை பற்றியோ, ட்ரம்ப்பின் பதிவு பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை. அதோடு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரும் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி மோதலை நிறுத்தியதாக கூறப்பட்டதை மறுத்தனர்.
ஆனாலும், அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் பேசிய அந்நாட்டு அதிபர் ட்ரம்ப், இந்தியா - பாகிஸ்தான் இடையே தான் தான் சமரசம் செய்து வைத்ததாகவும், மிகப்பெரும் அணு ஆயுத போரை தடுத்துவிட்டதாகவும் கூறினார். தற்போதும் கூறி வருகிறார்.
விக்ரம் மிஸ்ரியின் அமெரிக்க பயணம்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கூற்றுக்கு இன்னும் விடை கிடைக்காத சூழலில், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார். இன்றிலிருந்து 29-ம் தேதி வரை அவர் அமெரிக்காவில் தங்கி, ட்ரம்ப் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து, இரு நாடுகள் இடையேயான வாய்ப்புகள், ராணுவ ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது, ட்ரம்ப்புடன் இணைந்து, 21-ம் நூற்றாண்டில் இந்தியா-அமெரிக்கா இடையேயான வாய்ப்புகள், ராணுவ ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பேச்சுவார்த்தைகளுக்காக, India-U.S COMPACT என்ற தலைப்பில் பேச்சுவாத்தை நடத்துவதற்கான நிகழ்வை தொடங்கி வைத்தனர். அதன் தொடர்ச்சியாகவே தற்போது விக்ரம் மிஸ்ரி அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளதாக, வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளரின் இந்த பயணத்தின் போதாவது, ட்ரம்ப் மத்தியஸ்த சர்ச்சைக்கு ஒரு விடை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.




















