டொனால்டு ட்ரம்ப்பின் மருமகள் பகிர்ந்த வீடியோவை உடனடியாக நீக்கியது ஃபேஸ்புக்..
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசி, அவரது மருமகள் பகிர்ந்த வீடியோவை முகநூல் உடனடியாக நீக்கியது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜோ பைடனிடம் தோல்வியை தழுவினார். இந்த நிலையில், டொனால்ட் ட்ரம்பின் மருமகள் லாரா தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். டொனால்ட் ட்ரம்ப்பை, அவரது மருமகள் நேர்காணல் செய்வதாக அந்த வீடியோ வடிவமைக்கப்பட்டிருந்தது.
லாரா பதிவிட்ட இந்த வீடியோவை முகநூல் தனது பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. மேலும், லாரா ட்ரம்ப் இதுதொடர்பாக பேஸ்புக் அனுப்பிய மின்னஞ்சலை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த மின்னஞ்சலில், டொனால்ட் ட்ரம்பின் குரலில் வெளியிடப்பட்ட உள்ளடக்கத்தின் காரணமாக இந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனிடம் வெற்றியை பறிகொடுத்த ட்ரம்ப், இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இந்த தேர்தல் முடிவை ஏற்கமுடியாது என்றும் கடந்த ஜனவரி 6-ஆம் தேதி பேசினார். இதனால், அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உயிரிழந்தார். இதன் காரணமாக, கலவரத்தை தூண்டும் வகையில் ட்ரம்ப் பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டு, அவரது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களும் முடக்கப்பட்டன.