Twitter : விளம்பரதாரர்களுக்காக விட்டுக்கொடுக்கிறதா ட்விட்டர்.. நிறுவனத்தின் புதிய கட்டுப்பாடுகள்..
டிவிட்டர் நிறுவனம் அடுத்த வாரத்தில் புதிய கட்டுப்பாடுகளை வெளியிடும் என்று ட்விட்டர் நிறுவனம் விளம்பரதாரர்களுக்கு தனிப்பட்ட மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது
சில முக்கிய வார்த்தைகளைக் கொண்ட ட்வீட்டுகளுக்கு மேலேயோ அல்லது கீழேயோ தங்கள் விளம்பரங்கள் தோன்றுவதைக் கட்டுப்படுத்த நிறுவனங்களை அனுமதிக்கும் வகையில் டிவிட்டர் நிறுவனம் அடுத்த வாரத்தில் புதிய கட்டுப்பாடுகளை வெளியிடும் என்று ட்விட்டர் நிறுவனம் விளம்பரதாரர்களுக்கு தனிப்பட்ட மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது.
அக்டோபரில் எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்கியதிலிருந்து விளம்பரதாரர்களைத் தக்கவைத்துக் கொள்வதன் ஒரு பகுதியாக இந்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ட்விட்டர் அதன் வருவாயில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் டிஜிட்டல் விளம்பரங்களை விற்பனை செய்வதன் மூலம் சம்பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, எலன் மஸ்க் பொறுப்பேற்றதற்குப் பிறகான சமீபத்திய ட்விட்டர் நிறுவன வளர்ச்சியில், செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 25 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் குழந்தைகள் பாலியல் சுரண்டல் மற்றும் ஒருவரின் சம்மதம் பெறாமல் அவரது நிர்வாணத்தை பொதுவில் பகிரும் 44,611 ட்விட்டர் கணக்குகளை அந்த நிறுவனம் தடை செய்துள்ளது.
முன்னதாக, ட்விட்டர் தளம் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 25 வரை இதுபோன்ற 52,141 கணக்குகளை தடை செய்தது, மேலும் இந்தியாவில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகப் புகார் அளிக்கப்பட்ட 4,014 கணக்குகளை நீக்கியது. குழந்தைகளை கருப்பொருளாகக் கொண்ட வன்ம ஆபாசத்தைக் கோரும் ட்வீட்கள் ட்விட்டரில் இருப்பது குறித்து மஸ்க் தனது கவலைகளை வெளிப்படுத்தியிருந்தார். இதற்கிடையேதான் இந்த நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வெரிஃபைடு டிக் வாங்க மாதாமாதம் 8 டாலர் பணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டதிலிருந்து பல விவாதங்களை கிளப்பி வரும் நிலையில் இன்னமும் தெளிவான விளக்கம் எதுவும் யாருக்குமே கிடைக்க வில்லை. அப்படியே ஏதாவது ஒரு அப்டேட்டை அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தங்கள் வட்டாரங்கள் மூலம் அறிந்து செய்தி வெளியிட்டால் அதில் சென்று "அப்படியா?" என்று கேட்டு குட்டையை குழப்பி விடுகிறார் எலான் மஸ்க். அதனால் ட்விட்டரில் இது குறித்த விவாதங்கள் ஓய்ந்தபாடில்லை. டிவிட்டர் நிறுவனத்தின் 50% ஊழியர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்யப்பட்டதாலும், எலான் மஸ்கிற்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. இதனிடையே, தரவுகள் சரிபார்க்கப்பட்டு பயனாளர்களின் கணக்கிற்கு ப்ளூ டிக் வழங்கும் முடிவும் பெரும் சர்ச்சையானது. அதைதொடர்ந்து, நிறுவனங்களுக்கு தங்க நிற டிக், அரசாங்க அமைப்புகளுக்கு சாம்பல் நிற டிக் மற்றும் தனிநபர்களுக்கு நீல நிற டிக் என, மூன்று விதமான டிக்குகளுடன் அமல்படுத்தப்படும் என எலான் மஸ்க் அறிவித்தார்.
டிவிட்டரில் 420 வார்த்தைகளை எழுதலாம்?:
டிவிட்டரில் ஆக்டீவாக செயல்பட்டு வரும் எலான் மஸ்க், பொதுமக்களின் பல கேள்விகளுக்கு பதிலளிப்பதோடு, அவர்களின் பரிந்துரைகள் நன்றாக இருந்தால் அவற்றை டிவிட்டர் செயலியில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கிறார். அந்த வகையில், ட்விட்டர் பயனர் ஒருவர் ட்விட்டர் 2.0 எழுத்து வரம்பை 280க்கு பதிலாக 420 ஆக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதற்கு மஸ்க், "நல்ல யோசனை" என்று பதிலளித்தார்.
இனி ஃபாலோவர்ஸ் குறையலாம்:
இந்நிலையில், டிவிட்டர் பயனாளர்கள் யாரேனும் தங்களது ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை குறைவதை உணர்ந்தால் கவலைப்பட வேண்டாம். இதற்கு காரணமும் எலான் மஸ்க் தலைமையிலான டிவிட்டர் நிறுவனம் எடுத்துள்ள புதிய நடவடிக்கைதான். இதுதொடார்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ட்விட்டர் இப்போது நிறைய ஸ்பேம்/ஸ்கேம் கணக்குகளை நீக்குகிறது, எனவே உங்களைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைவதை நீங்கள் காணலாம் என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் போலி கணக்குகள் நீக்கப்படுவதால் தவறான தகவல்கள் பரப்பப்படுவது தடுக்கப்பட்டு, சுதந்திரமான பேச்சுக்கான தளமாக டிவிட்டர் நிறுவனம் உருவெடுக்கும் என கூறப்படுகிறது