கோட்டபய ராஜபக்ச அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்புவார் என்று தகவல்.. அடுத்து என்ன?
முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்ச செப்டம்பர் 2 அல்லது 3 ஆம் தேதிகளில் நாடு திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சமடைந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, நாடு திரும்புவார் என பல தடவைகள் பலராலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட போதும், இதுவரை அவர் இலங்கை திரும்பவில்லை. இந்நிலையில் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்ச அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்புவார் என இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதற்கமைய, கோத்தபாய செப்டம்பர் 2 அல்லது 3 ஆம் தேதிகளில் நாடு திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்ச நாடு திரும்புவதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் முன்னர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், கோத்தாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அவரைத் தொடர்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், மிரிஹான பிரதேசத்தில் உள்ள கோத்தாபய ராஜபக்சவின் வீட்டிற்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது .
இருந்தபோதிலும் கோத்தாபய ராஜபக்ச அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்புவதாக கூறுவது தொடர்பில் இலங்கை அரசு தரப்பில் இருந்து உத்தியோகபூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முன்னாள் அதிபர் கோத்தாபய ராஜபக்ச இலங்கை வருவதாக கூறப்படும் நிலையில் அவரின் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் முன்னாள் அதிபர் என்ற வகையில் இலங்கையின் சட்டப்படி அவருக்கான சலுகைகள் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
இருந்த போதிலும் இலங்கை வரும் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவாரா என்பதும் இன்னொரு கேள்வியாக இருக்கிறது .அமெரிக்க குடியுரிமை இழந்த அவர் இலங்கைக்கு வந்து அரசியலில் ஈடுபடாமல் இருப்பாரா என்பதும் இன்னொரு சந்தேகமே.
கோத்தபாய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி ஆகியோர் இலங்கையில் இருந்து வெளியேறி மாலை தீவு ,சிங்கப்பூர் என இறுதியாக தாய்லாந்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர் . இந்நிலையில், இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்ச தாய்லாந்தில் புகலிடம் கோரியதாகவும் ஆனால் தாய்லாந்து அரசு புகலிடம் வழங்க முடியாது என கூறியதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
அரசியல் தஞ்சம் கோரும் நோக்கமின்றி தமது நாட்டிற்கு வருகை தருமாறு கோத்தபாய ராஜபக்சவிடம் தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது . இதேவேளை முன்னாள் அதிபர் கோத்தாபய ராஜபக்ச எப்போது நாடு திரும்புவார் என்று தனக்கு தெரியாதென இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் தெரிவித்திருக்கிறார்.
கோத்தாபய ராஜபக்ச தனது தனி முடிவின்படி இலங்கையை விட்டு வெளியேறி, அதிபர் பதவியிலிருந்து விலகியுள்ளார் என அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.
கோத்தாபய ராஜபக்ச
தற்போது முன்னாள் அதிபர் எனவும், முன்னாள் அதிபருக்குரிய சலுகைகள் அவருக்கு உண்டு எனவும் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அவர் எப்போது நாடு திரும்புவார் என தனக்குத் தெரியாது எனவும், நாடு திரும்புவதா? இல்லையா? என்பது தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச தான் முடிவு எடுக்க வேண்டும் எனக் இலங்கை பிரதமர் தெரிவித்திருக்கிறார்.