Zelensky Trump: ட்ரம்பை பழிவாங்கும் மூடில் ஐரோப்பிய நாடுகள் - ஜெலன்ஸ்கிக்கு ஆதரவு, காரணம் என்ன?
Zelensky Trump: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான கருத்து மோதல்களுக்கு மத்தியில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் ஆதரவளித்துள்ளனர்.

Zelensky Trump: உக்ரைன் எப்போதும் தனித்துவிடப்படாது என ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி வாக்குவாதம்:
அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெல்ன்ஸ்கி இடையே கடும் கருத்து மோதல் ஏற்படது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், “அமெரிக்கா ஈடுபட்டால் அதிபர் ஜெலென்ஸ்கி அமைதிக்கு தயாராக இல்லை என்று நான் தீர்மானித்துள்ளேன். அவர் அமெரிக்காவின் அன்பான ஓவல் அலுவலகத்தில் அதை அவமதித்தார். அவர் அமைதிக்கு தயாராக இருக்கும்போது திரும்பி வரலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் ஆதரவு
இந்த சூழலுக்கு மத்தியில் பல ஐரோப்பிய நாடுகளின் பிரதமர்களும் அதிபர்களும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு தங்கள் ஆதரவை அறிவித்துள்ளனர். ஃப்ரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் ரஷ்யாவை ஒரு ஆக்கிரமிப்பாளர் என்று சாடினார். மேலும் கண்ணியம் மற்றும் மரியாதைக்காக போராடும் உக்ரைனுக்கு ஆதரவளிக்குமாறு வலியுறுத்தினார். ஸ்பெயின் மற்றும் போலந்து தலைவர்களும் ஜெலென்ஸ்கிக்கு தங்கள் ஆதரவை அறிவித்தனர், அதே நேரத்தில் ஜெர்மன் சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், உக்ரைன் ஜெர்மனி மற்றும் ஐரோப்பாவை நம்பலாம் என்று வலியுறுத்தினார்.
ஐரோப்பா நாட்டு தலைவர்கள் கருத்து
மாக்ரோன் பேசுகையில், “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனுக்கு உதவவும், ரஷ்யாவிற்கு தடை விதிக்கவும் நாம் அனைவரும் சரியான முடிவை எடுத்தோம் என்று நான் நினைக்கிறேன். அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். ஏனென்றால் அவர்கள் (உக்ரைன்) தங்கள் கண்ணியம், சுதந்திரம், குழந்தைகள் மற்றும் ஐரோப்பாவின் பாதுகாப்பிற்காக போராடுகிறார்கள்" என்று குறிப்பிட்டார்.
"உக்ரைன் நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை. உங்கள் கண்ணியம் உக்ரேனிய மக்களின் துணிச்சலை மதிக்கிறோம். வலிமையாக இருங்கள், தைரியமாக இருங்கள், அச்சமின்றி இருங்கள். ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதிக்காக நாங்கள் உங்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம்," என்று என்று ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ட்வீட் செய்துள்ளார். இன்றைய பெரும் சவால்களை எவ்வாறு சமாளிக்க விரும்புகிறோம் என்பது குறித்து வெளிப்படையாகப் பேச, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கு இடையே உடனடி உச்சிமாநாட்டிற்கு இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனி அழைப்பு விடுத்தார்.
பழிவாங்கும் மூடில் ஐரோப்பா நாடுகள்?
ஐரோப்பா நாடுகள் மீது 25 சதவிகிதம் வரை விரைவில் வரி அமல்படுத்தும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இந்நிலையில் தான், ட்ரம்பிற்கு எதிராகவும், ஜெலன்ஸ்கிக்கு ஆதரவாகவும் ஐரோப்பிய நாடுகள் தங்களது நிலைப்பாட்டை அறிவித்துள்ளன என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

