கணவன் இறந்து 2 வருடங்கள் கழித்து அதே கணவனால் குழந்தை!! கைகொடுத்த மருத்துவம்!
தன் மகன் குறித்து சிலாகித்து பேசிய அந்த தாய், எனது மகன் செப் நாளுக்கு நாள் என் கணவர்போலவே இருக்கிறான் எனக் குறிப்பிட்டுள்ளார்
கணவன் இறந்து 2 வருடங்கள் கழித்து மனைவி அழகான ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். கணவனின் இறப்புக்கு முன்னரே அவரின் விந்தணுவை மருத்துவ முறையில் சேகரித்து வைத்ததன் மூலம் இந்த குழந்தை பிறப்பு சாத்தியப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் லிவர்பூல் பகுதியைச் சேர்ந்தவர் ஜெரிஷ். இவருடைய மனைவி லூரான். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் ஜெரிஷ் மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டார். முன்னதாக இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் ஜெரிஷ் இப்படியான நோயில் படுத்த படுக்கையானார். எப்போது வேண்டுமானாலும் கணவர் இறந்துவிடுவார் என்பதால் கணவனின் விந்தணுவை மருத்துவ முறைப்படி சேகரித்து பாதுகாத்து வைத்தார். பல்வேறு மருத்துவ சிகிச்சைக்கு பலனளிக்காமல் 2020ம் ஆண்டு ஜூலை மாதம் ஜெரிஷ் காலமானார். அதன்பின்னர் 9 மாதங்கள் காத்திருந்த மனைவி லூரான் குழந்தை பெற்றெடுக்க திட்டமிட்டு தான் ஏற்கெனவே சேகரித்து வைத்த கணவனின் விந்தணுவை பயன்படுத்தியுள்ளார். ஐவிஎஃப் முறைப்படி மருத்துவ சிகிச்சைகள் எடுத்து மே 17ம் அதேதி ஆண்குழந்தையை பெற்றெடுத்தார் லுரான்.
இந்த அழகான தருணம் குறித்து பேசியுள்ள லூரான், நான் என் மகனிடம் இதுதான் தந்தை என ஜெரிஷின் புகைப்படத்தை அறிமுகம் செய்ய தேவையில்லை என்றே தோன்றுகிறது. இருவரும் நிச்சயம் ஒருவருக்கொருவர் உணர்வார்கள் என்றே நானும் நினைக்கிறேன்.அவர் இப்போது எங்கே வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவர் உதிரத்தின் மூலம் ஒரு உறவை எனக்கு கொடுத்துச் சென்றுள்ளார். எனது மகன் என் கணவரின் ஒரு பகுதிதான் என்றார்
மேலும் தன் மகன் குறித்து சிலாகித்து பேசிய அந்த தாய், எனது மகன் செப் நாளுக்கு நாள் என் கணவர்போலவே இருக்கிறான். அவன் பிறந்த போது அடர்த்தியான முடி இருந்தது. M வடிவிலான முடி அமைப்பு அவனுக்கு. அது என் கணவரைப்போலவே. அவனது உதடுகளும் என் கணவரைப்போலவேதான் என்றார்.
ஜெரிஷுக்கு முதல் காதல் மூலம் ஏற்கெனவே ஒரு மகன் இருக்கிறான். 18 வயதாகும் அந்த இளைஞர் தன்னுடைய தம்பியை கையில் ஏந்தி அன்பை பரிமாறியுள்ளார். அவர் குறித்தும் பேசிய லூரான், என் கணவருக்கு முதல் காதல் மூலம் ஒரு மகன் உண்டு. அவருக்கு 18 வயதாகிறது. என் மகனுக்கு அவர் ஒரு மூத்த அண்ணனாக தந்தை ஸ்தானத்தில் இருப்பார் என்றார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்