England Election 2024: அட்ராசக்க..! இங்கிலாந்து எம்.பி., ஆன தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் - யார் இவர்?
England Election 2024: தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் இங்கிலாந்து பொதுதேர்தலில் வென்று, நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
England Election 2024: இங்கிலாந்து நாடாளுமன்ற பொதுதேர்தலில், தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் வெற்றி பெற்று எம்.பி., ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எம்.பி., ஆன உமா குமரன்..!
தொழிலாளர் கட்சி சார்பில், ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவ் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றுள்ளார். தொழிலாளர் கட்சியின் உமா குமரன் மொத்தம் 19,145 வாக்குகளை பெற்ற நிலையில், கிரீன் கட்சியைச் சேர்ந்த ஜோ ஹட்சன் 7,511 வாக்குகளையும் பெற்று இரண்டாவது இடம் பிடித்தார். இதன் மூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட, தமிழ் வம்சாவளியை சேர்ந்த முதல் எம்.பி., என்ற பெருமையை உமா குமரன் பெற்றுள்ளார்.
மற்ற போட்டியாளர்கள் பெற்ற வாக்காளர்கள்:
உமா குமரனுக்கு எதிராக பணியாளர்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹலிமா கான் 3,274 வாக்குகளும், கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட கேன் பிளாக்வெல் 3,114 வாக்குகளும், நிஜாம் அலி எனும் சுயேச்சை வேட்பாளர் 2,380 வாக்குகளும், சீர்திருத்த UK கட்சியை சேர்ந்த ஜெஃப் எவன்ஸ் 2,093 வாக்குகளும் பெற்றனர். தாராளவாத ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜெனி லிட்டில் 1,926 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளரான பியோனா லாலி 1,791 வாக்குகளும், உமர் பாரூக் 1,826 வாக்குகளும், ஸ்டீவ் ஹெட்லி 375 வாக்குகளும் பெற்று தோல்வியை தழுவினர். 287 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. ஜூலை 4ம் தேதியன்று நடைபெற்ற வாக்குப்பதிவில், ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவ் தொகுதியில் 54.18% வாக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த உமா குமரன்?
இலங்கையின் ஆயுதப் போரில் இருந்து தப்பி இங்கிலாந்தில் தஞ்சமடைந்த தம்பதிக்கு,கிழக்கு லண்டனில் பிறந்தவர் தான் உமா குமரன். குயின் மேரியில் படித்தவர், ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவ் பகுதியில் வசித்து வருகிறார். தற்போதைய லண்டன் மேயர் சாதிக் கானுக்காகவும், மிக சமீபத்தில் உலகளாவிய காலநிலை அமைப்பின் ராஜதந்திர உறவுகளின் இயக்குநராகவும் உமா குமரன் பணியாற்றியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை, விஞ்ஞானிகள் மற்றும் காலநிலை தலைவர்களுடன் இணைந்து உலகெங்கிலும் உள்ள துணிச்சலான காலநிலை நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். உமா குமரனின் தாத்தா யாழ்ப்பாணத்தின் முதல் தொழிற்சங்கவாதிகளில் ஒருவர் ஆவார். துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உரிமை கோரி தொழிற்சங்க மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
மற்ற தமிழ் வேட்பாளர்களின் நிலை என்ன?
இங்கிலாந்து நாடாளுமன்ற பொதுதேர்தலில் முன்பு எப்போதும் இல்லாத வகையில், இந்த முறை 8 பேர் போட்டியிட்டனர். அவர்களில் குகன் ஹரன், நரனி ருத்ரராஜன், கமலா குகன், மவுரியன் செந்தில்நாதன், கிரிஷ்ணி மற்றும் டெவினா பால் ஆகியோர் தோல்வியை சந்தித்துள்ளனர்.