Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது மிகப்பெரும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.

Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தியது ஒரு நாடாக கூட இருக்கலாம் என சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
எலான் மஸ்க் குற்றச்சாட்டு:
உலகளாவிய எக்ஸ் தள (ட்விட்டர்) செயலிழப்பிற்கு மத்தியில், அதன் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், சமூக ஊடக தளத்திற்கு எதிராக ஒரு பெரிய சைபர் தாக்குதல் நடந்துள்ளதாகக் கூறியுள்ளார். ஒரு பெரிய, ஒருங்கிணைந்த குழு அல்லது ஒரு நாடு சைபர் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று அவர் சந்தேகிக்கிறார்.
எக்ஸ் தளத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய செயலிழப்பு குறித்த செய்திகளுக்கு பதிலளித்த மஸ்க், "𝕏க்கு எதிரான ஒரு பெரிய சைபர் தாக்குதல். நாங்கள் ஒவ்வொரு நாளும் தாக்கப்படுகிறோம், ஆனால் இது நிறைய வளங்களைப் பயன்படுத்தி செய்யப்பட்டது. ஒரு பெரிய, ஒருங்கிணைந்த குழு மற்றும்/அல்லது ஒரு நாடு இதில் ஈடுபட்டுள்ளது. மெட்டா பிரச்சினையின் தன்மையைக் கண்காணித்து வருகிறது” என எலான் மஸ்க் விளக்கமளித்துள்ளார்.
மீண்டும் மீண்டும் முடங்கிய எக்ஸ்:
மைக்ரோ பிளாக்கிங் தளமான எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) திங்களன்று மூன்றாவது முறையாக மிகப்பெரிய உலகளாவிய செயலிழப்பை சந்தித்தது. இதனால் ஏராளமான பயனர்கள் எக்ஸ் செயலி அல்லது வலைத்தளத்தை அணுக முடியவில்லை.
டவுன்டெடெக்டரில் பயனர்கள் செயலிழப்பைப் புகாரளித்தபோது, இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணியளவில் X முதல் செயலிழப்பைப் பதிவு செய்தது. பிற்பகல் 3.20 மணியளவில் மைக்ரோ பிளாக்கிங் தளம் தொடர்பாக 17,871 க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டதாக வலைத்தளத் தரவு காட்டுகிறது. டவுன்டெடெக்டர் வலைத்தளத்தின்படி, பயனர்கள் இரண்டாவது செயலிழப்பை இரவு 7:32 மணிக்குப் புகாரளித்தனர், அதே நேரத்தில் பயனர்கள் மீண்டும் மூன்றாவது செயலிழப்பை இரவு 9:32 மணிக்குப் புகாரளித்தனர்.
பாதிப்பு எங்கெங்கு?
இந்த செயலிழப்பு அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள பயனர்களைப் பாதித்துள்ளது. இதனிடையே, டவுன்டெக்டர் என்பது இணைய சேவைகளின் செயல்பாட்டு நிலையைக் கண்காணித்து, செயலிழப்பு அறிக்கைகளில் கணிசமான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, X செயலியில் 56 சதவீத பயனர்கள் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும், 33 சதவீதம் பேர் வலைத்தளத்தில் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் டவுன்டெக்டர் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், 11 சதவீதம் பேர் சர்வர் இணைப்புகளில் சிக்கல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடத்தியது யார்?
அமெரிக்க நிர்வாகத்தின் அமைப்பில் முக்கிய பிரிவில் இருக்கும் எலான் மஸ்க் பல முக்கிய முடிவுகளில் அதிக பங்காற்றி வருகிறார். அந்த வகையில் சீனா, கனடா உள்ளிட்ட நாடுகள் மீதான வரிவிதிப்பிலும் எலான் மஸ்கிற்கு பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பால் வணிக போர் தொடங்கியுள்ளதாகவும் பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தான், எக்ஸ் தளத்தின் மீதான தாக்குதலை ஒரு நாடு கூட நடத்தி இருக்கலாம் என எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.
அதோஉட், ”என்ன நடந்தது என்பது எங்களுக்கு சரியாகத் தெரியவில்லை, ஆனால் உக்ரைன் பகுதியில் இருந்து வரும் ஐபி முகவரிகளைக் கொண்டு, எக்ஸ் அமைப்பை செயலிழக்கச் செய்ய ஒரு பெரிய சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது," என்று ஃபாக்ஸ் நியூஸில் லாரி குட்லோவுடனான உரையாடலின் போது மஸ்க் கூறினார் .

