ட்விட்டர் நண்பரை நேரில் சந்தித்த எலான் மஸ்க்... நெகிழ்ச்சி பதிவு
புனேவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநரான பிரனய் பத்தோல், டெஸ்லா தலைமை செயல் அலுவலரான மஸ்க்கின் தீவிர ரசிகர் ஆவார்.
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், தனது நீண்டகால இந்திய நண்பரான, சிறந்த மென்பொருள் சேவை ஏற்றுமதியாளரான டாடா கன்சல்டன்சி சர்வீசஸில் பணிபுரியும் 23 வயது மென்பொருள் உருவாக்குநரை சந்தித்துள்ளார். இதுபற்றிய செய்தி ப்ளூம்பெர்கில் வெளியாகி உள்ளது.
புனேவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநரான பிரனய் பத்தோல், டெஸ்லா தலைமை செயல் அலுவலரான மஸ்க்கின் தீவிர ரசிகர் ஆவார். திங்கள்கிழமை (ஆகஸ்ட் 22) அன்று டெக்சாஸில், எலான் மஸ்க்கைச் சந்தித்தது குறித்து பிரனய் ட்வீட் செய்துள்ளார். 2018 முதல், எலான் மஸ்கும் பத்தோலும் ட்விட்டரில் நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
It was so great meeting you @elonmusk at the Gigafactory Texas. Never seen such a humble and down-to-earth person. You're an inspiration to the millions 💕 pic.twitter.com/TDthgWlOEV
— Pranay Pathole (@PPathole) August 22, 2022
மிக முக்கியமாக, டெஸ்லா தலைமை செயல் அலுவலரான எலான் மஸ்கை சந்தித்தது குறித்த தனது உணர்வுகளை விவரிக்கும் ஒரு பதிவை பத்தோல் ட்விட்டரில் எழுதி உள்ளார். அவர் எவ்வளவு தாழ்மையுடன் நடந்து கொண்டார் என்றும் விவேகமானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பத்தோல் ட்விட்டர் பக்கத்தில், "டெக்சாஸில் மஸ்கை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்படிப்பட்ட அடக்கமான மற்றும் தாழ்மையான நபரை பார்த்ததில்லை. நீங்கள் லட்சக் கணக்கானவர்களுக்கு ஒரு உத்வேகம்" என பதிவிட்டுள்ளார்.
லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகமாக இருக்கும் ஒருவரைச் சந்தித்ததற்காக பல நெட்டிசன்கள் பத்தோலை வாழ்த்தி ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளனர். இந்தப் பதிவுகள் வைரலாகி உள்ளது.
டெஸ்லாவின் தானியங்கி விண்ட்ஸ்கிரீன் வைப்பர்களில் உள்ள பிரச்சினை குறித்து, 2018இல் புனேவில் இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவராக இருந்த பத்தோல் மஸ்க்கிற்கு ஒரு ட்வீட் அனுப்பி இருந்தார்.
அந்த பதிவுக்கு, "சரி செய்யப்படும்" என மஸ்க் பதிலளித்திருந்தார். அப்போதிருந்து, புனேவைச் சேர்ந்த பத்தோலும் மஸ்க்கும் சமூக ஊடக தளத்தில் நண்பர்களாக இருந்து வருகின்றனர். மேலும், அவர்கள் ட்விட்டரில் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர்.
தற்போது, ட்விட்டரில் பத்தோலுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். அவரது சமீபத்திய ட்வீட் 7.2 மில்லியன் பார்வைகள், 28K ரீட்வீட்கள் மற்றும் 138K விருப்பங்களைப் பெற்றுள்ளது.
முன்னதாக, எகானமிக் டைம்ஸ்-க்கு அளித்த பேட்டியில், தனக்கு மஸ்க் முதல்முறையாக பதிலளித்தபோது, அதுவே அவரது வாழ்க்கையின் சிறப்பம்சமாக இருந்தது என்றார். இருப்பினும், எலானுடனான அவரது பரிமாற்றங்கள் மிகவும் சாதாரணமாகிவிட்டன. மேலும் அவர்கள் ட்விட்டரில் நேரடி மேசெஜ்கள் மூலம் அவ்வப்போது பேசுகின்றனர்.