எகிப்து அரச வம்ச மம்மிகள் தேசிய அருங்காட்சியகத்திற்கு விரைவில் மாற்றம்
எகிப்தின் மத்திய கெய்ரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள 22 பண்டைய எகிப்திய அரச மம்மிகளை பிரமாண்ட அணிவகுப்பின் மூலம் தேசிய அருங்காட்சியகத்துக்கு மாற்ற அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த மம்மிகள் எகிப்தின் புதிய இராஜ்ஜியத்தின் ராஜாக்கள் மற்றும் ராணிகளுடையது என்பது குறிப்பிடத்தக்கது. எகிப்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "வரும் சனிக்கிழமை மத்திய கெய்ரோவின் தஹ்ரிர் சதுக்கத்தில் உள்ள எகிப்திய அருங்காட்சியகத்தில் உள்ள 18 ராஜா மற்றும் நான்கு ராணிகளின் மம்மிகளை பிரமாண்ட வாகனங்கள் மூலம் சுமார் 5 கி.மீ (3 மைல்) தொலைவில் உள்ள எகிப்திய நாகரிகத்தின் தேசிய அருங்காட்சியகத்திற்கு அணிவகுத்து செல்லப்படும்" என்று தெரிவித்தது.
நிலைத்தன்மையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட வண்டிகளில் மம்மிகள் கொண்டு செல்லப்படும். பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மம்மிகள் நைட்ரஜன் நிரப்பப்பட்ட சிறப்பு காப்ஸ்யூலில் வைக்கப்படும் என்று எகிப்திய தொல்பொருள் ஆய்வாளர் ஜாஹி ஹவாஸ் கூறினார்.
முன்னதாக, மம்மிகள் வைக்கப்பட்டிருந்த கெய்ரோ அருங்காட்சியகத்தில் 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. எகிப்தின் பாரம்பரிய கலாசாரத்தை பறைசாற்றும் மம்மிகளை சிறந்த முறையில் காட்சிக்கு வைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தற்போது தேசிய அருங்காட்சியகத்துக்கு மாற்றப்படுவதாக ஆய்வாளர் தெரிவித்தார்.
மேலும், மம்மிகள் கேளிக்கை பொருளாக சித்தரிப்பதில் அர்த்தமில்லை. நாகரிகமான முறையில், அறிவுசார்ந்த விசயங்களாக காட்சிப்படுத்த வேண்டும். அதற்கான இந்த நடவடிக்கை தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மம்மி என்பது பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கும் எகிப்தின் இரண்டாவது வம்சக் காலகட்டத்தில் (கிமு 2800) இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்துதல் என்பது இறந்தோருக்கு செய்யப்படும் சடங்குளில் ஒன்றானது. இறந்ததற்கு பிறகான வாழ்க்கையை வாழ உடலைப் பதப்படுத்துதல் முக்கியம் என அவர்கள் கருதத் தொடங்கினார்கள். எகிப்தியர்களின் செல்வம் பெருகப் பெருக இறந்த பிறகு செய்யப்படும் சடங்கானது சமூகத் தகுதிநிலையை உணர்த்துவதாகக் கருதப்பட்டது. இதன்காரணமாக பெரிய பெரிய கல்லறைகள் கட்டும் பழக்கங்களும், அதிநவீன இறந்த உடலை மம்மியாகப் பதப்படுத்தும் முறைகளும் நடைமுறைக்கு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மன்னர்கள் தற்போது எகிப்து நாட்டின் தலைநகரத்தில் மம்மிகளாக அணிவகுத்து வருவது எகிப்து மக்களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.