Putin Vs Trump: “உங்க ஏரியா பக்கத்துலயே எங்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் நிக்குது“- புதினை எச்சரித்த ட்ரம்ப்
அணுசக்தி ஏவுகணையை ரஷ்யா சோதித்த நிலையில், அந்நாட்டின் கடல் எல்லைக்கு அருகிலேயே தங்களது உலகின் சக்திவாய்ந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் நிற்பதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறைமுகமாக எச்சரித்துள்ளார்.

ரஷ்யா, அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் வல்லமை படைத்த அணுசக்தியால் இயங்கும் புரேவெஸ்ட்னிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்ததாக அந்நாட்டு அதிபர் புதின் நேற்று அறிவித்தார். இந்த நிலையில், அவருக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கும் விதமாக, உலகின் சக்திவாய்ந்த தங்கள் நாட்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல், ரஷ்ய கடல் எல்லைக்கு அருகிலேயே நிற்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், போரை நிறுத்தும் வேலையை பார்க்குமாறு புதினுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசிய ட்ரம்ப்
ஜப்பானில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ட்ரம்ப், ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரஷ்யா மேற்கொண்ட அணுசக்தி ஏவுகணை சோதனை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தங்களிடம் உலகின் சக்திவாய்ந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் இருப்பது ரஷ்யாவிற்கு தெரியும் என்றும், அது அவர்களின் கடல் எல்லைக்கு அருகிலேயே இருக்கிறது, அதனால் அது 8,000 மைல் தொலைவிற்கெல்லாம் பயணிக்க வேண்டியதில்லை என்று தான் சொல்ல வருவதாகவும், ரஷ்யாவிற்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் பதிலளித்தார் ட்ரம்ப்.
மேலும், “அவர்கள் எங்களிடம் விளையாடவில்லை, நாங்களும் அவர்களுடன் விளையாடவில்லை“ என்று தெரிவித்த ட்ரம்ப், தாங்கள் எப்போதுமே ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
புதினுக்கு அறிவுரை கூறிய ட்ரம்ப்
தொடர்ந்து பேசிய ட்ரம்ப், புதின் சொல்வது பொருத்தமானதாக இருப்பதாக தான் கருதவில்லை என்றும், மாறாக அவர் போரை அவர் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்தார். அதோடு, ஒரு வாரத்தில் முடிய வேண்டிய போர் தற்போது நான்காவது ஆண்டில் உள்ளது என்று கூறிய அவர், ஏவுகணை சோதனைக்கு பதிலாக, போரை நிறுத்தும் முயற்சிகளை அவர் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஏவுகணை சோதனை குறித்து அறிவித்த புதின்
அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அணுசக்தி மூலம் இயங்கும் ஏவுகணையான புரேவெஸ்ட்னிக்கின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக ரஷ்ய அதிபர் புதின் நேற்று அறிவித்தார். கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணையான இது, 14,000 கிலோ மீட்டர் தூரத்தை 15 மணி நேரம் தொடர்ச்சியாக பறந்து கடந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்புத்துறை தளபதி மற்றும் ராணுவ கமாண்டர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்திய புதின், புரேவெஸ்ட்னிக் ஏவுகணையை பாதுகாப்புப் படையில் இணைப்பதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
'புரேவெஸ்ட்னிக்' ஏவுகணையின் சிறப்பு என்ன.?
ரஷ்யா தற்போது சோதித்துள்ள புரேவெஸ்ட்னிக் க்ரூஸ் ஏவுகணைகள், அணுசக்தி மூலம் இயங்கக் கூடிய குறைந்த உயரத்தில் பறக்கும் ஒரு ஏவுகணையாகும். இதன் அணுசக்தி உந்துவிசை, வழக்கமான எஞ்சின்களைவிட நீண்ட தூரமும், நீண்ட நேரமும் பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், எரிபொருள் கவலை இல்லாமல், இலக்கை அடையும் வரை நீண்ட நேரம் இதனால் வானில் சுற்றித் திரிய முடியும். இந்த ஏவுகணை அணு ஆயுதத்தை சுமந்து கொண்டு, ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளின் கண்களில் மண்ணைத் தூவி, குறைந்த உயரத்தில் நிலப்பரப்பை கடந்து சென்று தாக்கும் வல்லமை படைத்தது. இது, 50 முதல் 100 மீட்டர் உயரத்தில் பறப்பதால், வான் பாதுகாப்பு ரேடார்கள் இதை கண்டறிவது கடினம் என கூறப்படுகிறது.
புரேவெஸ்ட்னிக் ஏவுகணை 20,000 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் திறன் கொண்டது. இந்த ஏவுகணையால் பல நாட்கள் வானில் சுற்றிக்கொண்டே இருக்க முடியும் என்று அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான நியூக்ளியர் ட்ரெட் இனிஷியேட்டிவ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




















