Trump Praises Modi: மோடி என்னை விட வல்லவர்... புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்... ஆனா ஒரு ஆப்பும் வச்சுட்டார்.!!
இந்திய பிரதமர் மோடி தன்னை விட வல்லவர் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். ஆனாலும் ஒரு செக்கும் வைத்துள்ளார். அது என்னவென்று பார்க்கலாம்.

அமெரிக்காவிற்கு இரண்டு நாள் பயணமாக சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ட்ரம்ப், மோடி தன்னை விட வல்லவர் என்றும் புகழாரம் சூட்டினார். எதைப்பற்றி அவர் இப்படி கூறினார் என்று பார்க்கலாம்.
“பேச்சுவார்த்தை நடத்துவதில் மோடி என்னை விட வல்லவர்”
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், மோடியும் ட்ரம்ப்பும் சந்தித்து பேசினர். இருநாடுகளுக்கும் இடையேயான நட்புறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய பின், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ட்ரம்ப், பேச்சுவார்த்தை நடத்துவதில் மோடி தன்னைவிட வல்லவர் என்றும், தான் அவருக்கு ஒரு போட்டி கூட இல்லை என்றும் புகழாரம் சூட்டினார். அதோடு, மோடி மற்றும் இந்தியாவுடன் தான் தனித்துவமான பந்தத்தை கொண்டுள்ளதாவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
வரி விதிப்பிலிருந்து இந்தியா தப்பாது - ட்ரம்ப்
இந்தியாவுடன் சிறந்த பந்தம் இருந்தாலும், உலகெங்கிலும் உள்ள தங்களது வர்த்தக பங்காளிகளுக்கு தான் விதித்துவரும் வரியிலிருந்து இந்தியா தப்ப முடியாது என்றும் ட்ரம்ப் எச்சரித்தார். ஏற்கனவே, இந்தியாவின் இறக்குமதி வரிகள் அதிகமாகவும், நியாயமற்றதாகவும் இருப்பதாக தெரிவித்திருந்த ட்ரம்ப், இந்தியா ஒரு கட்டண ராஜா என்றும் விமர்சித்திருந்தார். இந்த நிலையில், இந்தியா எந்த அளவிற்கு வரி விதிக்கிறதோ, அதே அளவிற்கு தாங்களும் வரி விதிப்போம் என கூறினார்.
”சிறந்த வர்த்தக பாதையை உருவாக்குவோம்”
உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய வர்த்தகப் பாதைகளில் ஒன்றை உருவாக்க இருவரும் ஒப்புக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்தார். அந்த வர்த்தகப் பாதை, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தில்(IMEC) இயங்கும் என்று கூறினார். இதற்காக, இந்தியாவிலிருந்து இஸ்ரேல் முதல் இத்தாலி வரையிலும், அங்கிருந்து அமெரிக்கா வரை அனைத்து பங்காளி நாடுகளையும் இணைக்கும் விதமாக, சாலைகள், ரயில்வே வழித்தடங்கள், கடலுக்கடியில் கேபிள்களை என அனைத்திற்கு ஏராளமான பொருட்செலவை எல்லா நாடுகளும் செய்ய உள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
மேலும், இந்த வழித்தடத்தில், இந்தியாவை வளைகுடா பகுதியுடன் இணைக்கும் கிழக்கு காரிடாரும், வளைகுடா பகுதியை ஐரோப்பாவுடன் இணைக்கும் வடக்கு காரிடாரும் அடங்கும் எனவும், இதற்காக ஏற்படுத்தப்பட உள்ள சாலை, ரயில்வே, கப்பல் போக்குவரத்துகளுக்கான வழித்தடங்களை ஏற்படுத்த, இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய யூனியன், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மணி ஆகிய நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தம், இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின்போது கையெழுத்தானதாகவும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
இந்தியாவிற்கான ராணுவ தளவாட விற்பனை அதிகரிக்கப்படும் என்றும் ட்ரம்ப் உறுதியளித்தார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும், வளத்தையும் பாதுகாக்க இருவரும் உறுதியேற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
”அமெரிக்கா-இந்தியா உறவு வலுவானது”
இந்த அறிவிப்புகளின் மூலம், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நட்புறவு, இதுவரை இருந்ததிலேயே மிகவும் வலுவானது என்பதை தான் சுட்டிக்காட்ட விரும்புவதாக ட்ரம்ப் தெரிவித்தார். மேலும், இதுவரை எந்த இரு நாடுகளின் இரு தலைவர்களிடையே இருந்த நட்புறவிலேயே, மோடியுடனான தனது நட்பே சிறந்தது என்றும் ட்ரம்ப் பெருமிதமாக கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

