(Source: Poll of Polls)
"ஈரான் அணு ஆயுதங்கள் மீது தாக்குதல் நடத்துங்க" ஐடியா கொடுத்த டிரம்ப்.. பேரழிவை நோக்கி இஸ்ரேல்?
போரை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்தும் செல்லும் வகையில், ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்கள் மீது முதலில் தாக்குதல் நடத்த வேண்டும் என இஸ்ரேலுக்கு டிரம்ப் ஐடியா கொடுத்துள்ளார்.
ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என இஸ்ரேலுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் யோசனை கூறியுள்ளார்.
மேற்காசியா முழுவதும் போரால் பற்றி எரிந்து வருகிறது. காசாவில் தொடங்கிய போர் ஈரான் வரை விரிவடைந்துள்ளது. இதற்கு எல்லாம் தொடக்கப்புள்ளியாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் அமைந்தது.
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம்:
பதில் தாக்குதல் நடத்துகிறோம் என சொல்லி போரில் இறங்கிய இஸ்ரேல், பிரச்னையை மத்திய கிழுக்கு நாடுகள் முழுவதும் பரவ செய்துள்ளது. காசா போர் தொடங்கியதில் இருந்து பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது சிறிய சிறிய தாக்குதலை நடத்தி வந்தது லெபனானில் இயங்கும் ஈரான் ஆதரவு இயக்கமான ஹிஸ்புல்லா.
காசாவில் ஏற்கனவே 40,000க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்த இஸ்ரேல் ராணுவம், லெபனானில் தாக்குதலை தொடங்கியது. பேஜர், வாக்கிடாக்கி தாக்குதல் உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியது. இதற்கு இஸ்ரேலே காரணம் என சொல்லப்படுகிறது.
இதையடுத்து, லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தின. போரில் பெரும் திருப்பமாக ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் பாதுகாப்பு படை கொலை செய்தது.
அதன் தொடர்ச்சியாக, தற்போது ஈரான், இஸ்ரேல் நாடுகள் இரண்டும் நேரடியாக போரில் குதித்துள்ளன. கடந்தாண்டு டிசம்பர் மற்றும் இந்தாண்டு ஏப்ரல் மாதம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலை தூண்டிவிடும் டிரம்ப்:
இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இடையே நடந்து வரும் போர் உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த போரை நிறுத்த வேண்டும் என பல நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த சூழலில், போரை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்தும் செல்லும் வகையில், ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்கள் மீது முதலில் தாக்குதல் நடத்த வேண்டும் என இஸ்ரேலுக்கு டிரம்ப் ஐடியா கொடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டிரம்ப், வட கரோலினாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "அவரிடம் (பைடன்) ஈரானைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், ஈரானைத் தாக்குவீர்களா? என கேட்டனர். 'அணு ஆயுதங்கள் மீது தாக்குதல் நடத்தாத வரை பிரச்னை இல்லை என அவர் (பைடன்) பதில் அளித்தார். ஆனால், நான் என்ன சொல்வேன் என்றால் ' நீங்கள் அடிக்க வேண்டிய முதல் இடம் அதுதான், இல்லையா?
அவர் (பைடன்) இதை தவறாகப் புரிந்து கொண்டார் என்று நினைக்கிறேன். தாக்க வேண்டியதுதானே? அதாவது, நமக்கு இருக்கும் மிகப்பெரிய ஆபத்து அணு ஆயுதங்கள்தான். அந்தக் கேள்வியை அவரிடம் கேட்டபோது, முதலில் அணுகுண்டைத் தாக்குங்கள். மீதியைப் பற்றி பிறகு கவலைப்படுங்கள் என்று பதில் சொல்ல வேண்டும்" என்றார்.