Crime : கொலை செய்யப்பட்ட 1000 நாய்கள்...பட்டினி போட்டு கொன்ற கொடூரம்...முதியவர் செய்த அதிர்ச்சி காரியம்..!
கைவிடப்பட்ட நாய்களை எடுத்து சென்று அதை சாகும் வரை வைத்து பட்டினி போட்டதை குற்றவாளி ஒப்பு கொண்டார்
விலங்குகளை செல்லப்பிராணியாக வளர்க்கும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில், குறிப்பாக மனிதரின் உற்றத் தோழனாக கருதப்படும் நாய், மனித இனத்திற்கு பல்வேறு வகைகளில் உதவுகிறது. செல்லப்பிராணி என்பதை காட்டிலும் குடும்பத்தின் ஒரு உறுப்பினராக நாய்கள் வளர்க்கப்படுகிறது.
தென் கொரியாவில் அதிர்ச்சி:
நிலைமை இப்படி இருக்க தென் கொரியாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அந்த கொடூர சம்பவத்தில், கைவிடப்பட்ட 1,000 நாய்களை 60 வயது முதியவர் ஒருவர் பட்டினி போட்டு கொன்றுள்ளார். இதுகுறித்து தென் கொரியா காவல்துறை விசாரணை செய்து வருகிறது.
சம்பவம் குறித்து விவரித்த காவல்துறை தரப்பு, "கைவிடப்பட்ட நாய்களை எடுத்து சென்று அதை சாகும் வரை வைத்து பட்டினி போட்டதை குற்றவாளி ஒப்பு கொண்டார்"
இதுகுறித்து விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறுகையில், "இனப்பெருக்க வயதைக் கடந்த அல்லது வணிக ரீதியாக கவர்ச்சிகரமானதாக இல்லாத நாய்களை எடுத்து செல்வதற்காக நாய் வளர்ப்பாளர்கள் அந்த முதியவருக்கு பணம் கொடுத்துள்ளனர்.
முதியவர் செய்த கொடூரம்:
2020ஆம் ஆண்டு முதல் நாய்களை கவனித்துக் கொள்வதற்காக அவருக்கு நாய் ஒன்றுக்கு 10,000 வோன் (தென் கொரிய பணம்) வீதம் பணம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நாய்களை அறையில் அடைத்து வைத்து பட்டினி போட்டு கொன்றார்.
தென் கொரியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட ஜியோங்கி மாகாணம் யாங்பியோங் பகுதியில் ஒரு உள்ளூர்காரர் தனது சொந்த நாயை தேடிக்கொண்டிருந்தபோது, 1000 கணக்கான நாய்கள் கொல்லப்பட்டது அவருக்கு தெரிய வந்துள்ளது" என்றார்.
இதில், மோசமான விஷயம் என்னவென்றால், தரையில் ஒரு தளம் உருவாகும் அளவுக்கு கொல்லப்பட்ட நாயின் சிதைந்த உடல்கள் தரையில் நிறைந்து கிடந்தன. அதுமட்டும் இன்றி, இரண்டாவது தளம் உருவாகும் அளவுக்கு மீதமுள்ள நாயின் சிதைந்த உடல்கள் அங்கு போடப்பட்டிருந்தது.
விலங்குகளை துன்புறுத்தும் போக்கு அதிகரிப்பு:
பட்டினியால் வாடிய நாய்கள் கூண்டு, சாக்கு, ரப்பர் பெட்டிகள் ஆகியவற்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து உள்ளூர் நிர்வாகம் கூறுகையில், "இறந்த நாய்கள் இந்த வாரம் அகற்றப்படும். நான்கு நாய்கள் சித்திரவதையில் இருந்து தப்பித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன.
ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தோல் நோயாலும் அந்த நாய்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நான்கு நாய்களில் இரண்டு நாய்கள் ஆபத்தான நிலையில் உள்ளன"
தென் கொரியாவில் கடுமையான விலங்கு பாதுகாப்பு சட்டங்கள் அமலில் உள்ளன. அங்கு வேண்டுமென்றே ஒரு விலங்குக்கு உணவு அளிக்காமலோ அல்லது தண்ணீர் கொடுக்காமலோ கொலை செய்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 30 மில்லியன் அபராதம் விதிக்கப்படும். அங்கு, விலங்குகளை துன்புறுத்தும் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.