30% வரை உயர்ந்த டொஜ்காயின் மதிப்பு… ட்விட்டர் லோகோவாக மாறிய எதிரொலி!
நகைச்சுவையாக உருவாக்கப்பட்ட Doge meme லோகோவை ட்விட்டர் தளத்தின் வலை பதிப்பில் லோகோவாக வைத்திருந்தது இன்று காலை முதலே பெரும்பான்மையாக பேசப்பட்டு வருகிறது.
ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஒ) எலன் மஸ்க் ட்விட்டர் இணையதளத்தில் உள்ள நீல பறவை லோகோவை டிஜிட்டல் நாணயத்தின் லோகோவான டொஜ் காயின் லோகோவாக மாற்றியதை தொடர்ந்து, கிரிப்டோகரன்சி Dogecoin இன் மதிப்பு ஒரே நாளில் 30% உயர்ந்துள்ளது.
Doge மீம் லோகோ
2013 ஆம் ஆண்டு காலத்தில் நகைச்சுவையாக உருவாக்கப்பட்ட Doge meme லோகோவை ட்விட்டர் தளத்தின் வலை பதிப்பில் லோகோவாக வைத்திருந்தது இன்று காலை முதலே பெரும்பான்மையாக பேசப்பட்டு வருகிறது. அந்த மீம் டாக்-இன் புகைப்படத்தை வைத்து doge coin என்ற க்ரிப்டோ காயினை மஸ்க் உருவாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. ட்விட்டரின் மொபைல் ஆப்பில் எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லை, இணையதள பக்கத்தில் மட்டும் லோகோ மாறியுள்ளது.
கிரிப்டோகரன்சியான Dogecoinக்கு ஆதரவாக ஒரு பிரமிட் திட்டத்தை இயக்குவதாகக் குற்றம் சாட்டப்பட்டு 258 பில்லியன் டாலர் மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கை தள்ளுபடி செய்ய எலன் மஸ்க் ஏப்ரல் 1 அன்று அமெரிக்க நீதிபதியிடம் கேட்டது குறிப்பிடத்தக்கது.
ஜாலியான வேலை
மன்ஹாட்டன் ஃபெடரல் நீதிமன்றத்தில், மஸ்க் மற்றும் அவரது மின்சார கார் நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றின் வழக்கறிஞர்கள் Dogecoin பற்றி அடிக்கடி வேடிக்கையான ட்வீட்களை பதிவிடுவது மஸ்க்கின் 'ஜாலியான வேலை' என்று கூறினர். மஸ்க் யாரையும் ஏமாற்றவில்லை, அவர் அபாயங்களை மறைக்கவில்லை என்பதை முதலீட்டாளர்கள் விளக்கத் தவறியதாக குற்றம் சாட்டப்படுகிறது.
வேடிக்கையான டீவீட்ஸ் தவறில்லை
"Dogecoin Rulz" மற்றும் "உயர்வு, தாழ்வுகள் இல்லை, டோஜ் மட்டுமே" போன்ற அவரது அறிக்கைகள் மோசடிக் கூற்றாக இருப்பதாகவும், தெளிவற்றவை என்றும் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர். "கிட்டத்தட்ட $10 பில்லியன் சந்தை மூலதனத்தைத் தொடர்ந்து வைத்திருக்கும் ஒரு முறையான கிரிப்டோகரன்சிக்கு ஆதரவான வார்த்தைகளையோ அல்லது வேடிக்கையான படங்களையோ ட்வீட் செய்வதில் சட்டவிரோதமானது எதுவும் இல்லை" என்று மஸ்க்கின் வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர்.
டொஜ்காயினை வைத்து விளையாடுகிறார்
மேலும், "இந்த நீதிமன்றம் வாதிகளின் கற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் மற்றும் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும்," என்று கேட்டுக்கொண்டனர். ஒரு அடிக்குறிப்பில், Dogecoin 'பாதுகாப்பானது'' என்ற முதலீட்டாளர்களின் கூற்றையும் எதிர்தரப்பு நிராகரித்தனர். முதலீட்டாளர்களின் வழக்கறிஞர் இவான் ஸ்பென்சர் ஒரு மின்னஞ்சலில், "எங்கள் வழக்கு வெற்றிபெறும் என்பதில் நாங்கள் முன்னெப்போதையும் விட அதிக நம்பிக்கை கொண்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார். Forbes இன் கூற்று படி உலகின் இரண்டாவது பணக்காரரான மஸ்க், இரண்டு ஆண்டுகளில் Dogecoin இன் விலையை வேண்டுமென்றே 36,000% க்கும் அதிகமாக உயர்த்தி பின்னர் அதை செயலிழக்கச் செய்ததாக முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியதாக தெரிகிறது.