உலகிலே நீளமான முகத்திரை அணிந்து சைப்ரஸ் நாட்டு மணப்பெண் கின்னஸ் சாதனை
மத்தியதரைக் கடலுக்கு கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த மணப்பெண் உலகின் நீளமான முகத்திரையை அணிந்து கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
பல்வேறு கலாச்சாரங்களில், திருமணத்தின் போது மணப்பெண் முகத்திரை அணிவது வழக்கம். அடக்கம் மற்றும் கீழ்ப்படிதலின் அடையாளமாக முகத்திரை விளங்குகிறது என்ற கூற்றும் முன்வைக்கப்படுகிறது.
ஆனால், சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த மரியா பராஸ்கேவா தனது திருமணத்தின்போது உலகின் மிக நீண்ட திருமண முகத்திரையை அணியவேண்டும் என்பதை வாழ்நாள் கனவாக கொண்டிருந்திருக்கிறார். அதன்படி, தனது திருமண நிகழ்வின் 6,962.6 மீ (22,843 அடி 2.11 அங்குலம்) நீளமான முகத்திரை அணிந்து கின்னஸ் சாதனையை செய்திருக்கிறார். இதனை Guinness world records தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, இலங்கை நாட்டில் உள்ள கண்டியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது திருமண நிகழ்வின்போது 3.2 கிலோமீட்டர் நீளமான புடவைத்தலைப்பை அணிந்து கின்னஸ் சாதனை படைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.