Covid 19 : மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா...கடந்த 30 நாட்களில் உயிரிழப்புகள் 20 சதவீதம் அதிகரிப்பு - உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
உலக அளவில் கடந்த 30 நாட்களில் மட்டும் கொரோனா உயிரிழப்புகள் 20 சதவீத அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Covid 19 : உலக அளவில் கடந்த 30 நாட்களில் மட்டும் கொரோனா உயிரிழப்புகள் 20 சதவீத அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் முதன்முதலில் பரவியது. கொரோனா பரவியதையடுத்து உலகம் முழுவதும் திகைத்து முடங்கியது. உலகமே ஊரடங்கு, தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி என கொரோனாவுடன் போராடத் தொடங்கியது. ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, ஓமிக்ரான் என கொரோனா நிறைய திரிபுகளாக உருமாறியுள்ளது. இவற்றில் டெல்டா திரிபு தான் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் இரண்டாவது அலை கொரோனாவில் நிறைய உயிர்கள் பலியாகவும் டெல்டா திரிபுதான் காரணமாக இருந்தது. இந்நிலையில் சீனாவில் கடந்து நவம்பர் மாத இறுதி தொடங்கி மீண்டும் ஓமிக்ரானின் புதிய திரிபு ஒன்று பரவிவருகிறது.
சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அங்கிருக்கும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சீனாவில் உருமாறிய கொரோனா தொற்றால் தினம்தோறும் ஆயிரக்கணக்காணோர் உயிரிழந்துள்ளனர்.
20 சதவீதம் அதிகரிப்பு
இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது, ” கடந்த டிசம்பர் 19ஆம் தேதி முதல் கடந்த 15ஆம் தேதி வரையில் சுமார் 1 மாதத்தில் மட்டும் உலக அளவில் கொரோனா மரணங்கள் 20 சதவீதம் வரை அதிகிரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 டிசம்பவர் 19 முதல் ஜனவரி 15 வரையில் கடந்த 28 நாட்களில் சுமார் 1.3 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் சுமார் 53 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய 28 நாட்களை ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பானது 7 சதவீதம் சரிந்ததாகவும், உயிரிழப்புகள் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 15ஆம் தேதி நிலவரப்படி உலக அளவில் மொத்தம் 66 கோடிக்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், 67 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இன்றைய நிலவரம்
உலக அளவில் கொரோனா தொற்றால் இதுவரை 67.28 கோடி போர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 64.43 கோடி பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் இதுவரை 67.42 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நேற்றைய நிலவரப்படி 134 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று 145 பேர் கொரோனா தொற்றால் பாதிக்ப்பட்டுள்ளனர். இதுவரை 4.46 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கொரோனா தொற்றால் 1,946 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் இதுவரை 5,30,730 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 4,41,49,111 ஆக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க