Chris Hipkins : நியூசிலாந்தின் புதிய பிரதமராகும் கிறிஸ் ஹிப்கின்ஸ்...யார் இவர்..?
புதிய பிரதமராக முன்னாள் கொரோனா அமைச்சர் கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்க உள்ளார்.
நியூசிலாந்து பிரதமராக பொறுப்பு வகித்த ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், புதிய பிரதமராக முன்னாள் கொரோனா அமைச்சர் கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்க உள்ளார்.
பிரதமர் பதவிக்கு கிறிஸின் பெயரை சக தொழிலாளர் கட்சி எம்பிக்கள் முன்மொழிந்துள்ளதாக ஆளும் தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் ஆளும் தொழிலாளர் கட்சி எம்பிக்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளனர்.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (நாளை) அவர் பிரதமராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்பார். தற்போது, கல்வி மற்றும் காவல்துறை அமைச்சகத்தை கிறிஸ் ஹிப்கின்ஸ் கவனித்து வருகிறார்.
இதுகுறித்து தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவர் டங்கன் வெப் வெளியிட்ட அறிக்கையில், "ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு தொழிற்கட்சி குழு கூடி, வேட்புமனுவை ஆமோதித்து, கிறிஸ் ஹிப்கின்ஸ் கட்சித் தலைவராக ஏற்பதை உறுதிப்படுத்த உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
நியூசிலாந்தில் ஆளும் கட்சியின் தலைவராக இருப்பவர்தான் பிரதமராக வர முடியும். வரும் அக்டோபர் 14ஆம் தேதி, நியூசிலாந்தில் பொது தேர்தல் நடைபெறுகிறது. அந்த தேர்தலை, ஹிப்கின்ஸ் தலைமையில் ஆளும் தொழிலாளர் கட்சி சந்திக்க உள்ளது. ஆனால், வெளியாகி வரும் கருத்துக்கணிப்புகளில் தொழிலாளர் கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது.
விலைவாசி உயர்வு, ஏழ்மை, அதிகரித்து வரும் குற்ற விகிதம் ஆகிய விவகாரங்களை முன்வைத்து எதிர்கட்சி விமர்சித்து வருகிறது.
உலக அளவில் முற்போக்கு அரசியலை முன்னிறுத்தி வரும் ஜெசிந்தா ஆர்டெர்ன், தனது பதவியை ராஜினாமா செய்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில், தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்தார் ஜெசிந்தா ஆர்டெர்ன்.
இயற்கை பேரிடர், கொரோனா பெருந்தொற்று, பயங்கரவாத தாக்குதல் என பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நியூசிலாந்தை சிறப்பாக வழிநடத்தியவர் ஜெசிந்தா. ராஜினாமாவை அறிவித்த பின்னர் பேசிய அவர், "நீண்ட காலத்திற்கு பிறகு நன்றாக தூங்கியதாக" கூறினார்.
Wow. This quote from Jacinda Ardern’s resignation: ‘Hope I leave New Zealanders with a belief that you can be kind but strong, empathetic but decisive, optimistic but focused...that you can be your own kind of leader, one who knows when it’s time to go’..
— Joyce Karam (@Joyce_Karam) January 19, 2023
pic.twitter.com/gsBc09qij3
ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு பல்வேறு தரப்பினர் தங்களின் வாழ்த்துகளை பதிவு செய்து வருகின்றனர். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்ட உலக தலைவர்களும் அவருடனான நினைவை பகிர்ந்து கொண்டனர்.