China President : போருக்கு தயாராகுங்க.. ராணுவத்திற்கு சிக்னல் அனுப்பிய அதிபர் ஷி ஜின்பிங்.. எந்த நாட்டை குறிவைக்கிறது சீனா?
கட்சி மற்றும் ராணுவத்தின தலைவர், அதிபர் என மூன்று சக்திவாய்ந்த பதவிகளையும் 10 ஆண்டுகளுக்கு மேலாக வகிக்கும் இரண்டாவது தலைவர் ஷி ஜின்பிங் ஆவார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உச்சபட்ச அமைப்பாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய காங்கிரஸ் உள்ளது. கட்சியின் தேசிய காங்கிரஸ் மாநாடு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
அந்த வகையில், கடந்த மாதம் நடைபெற்ற மாநாட்டில், சீன பிரதமராக பதவி வகித்து வரும் ஷி ஜின்பிங், ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராகவும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் தொடர்ந்து மூன்றாவது முறையாக நியமிக்கப்பட்டார். சீன பாதுகாப்பு படைகளின் உச்சபட்ச அமைப்பாக மத்திய ராணுவ ஆணையம் உள்ளது.
கட்சி மற்றும் ராணுவத்தின தலைவர், அதிபர் என மூன்று சக்திவாய்ந்த பதவிகளையும் 10 ஆண்டுகளுக்கு மேலாக வகிக்கும் இரண்டாவது தலைவர் ஷி ஜின்பிங் ஆவார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மாவோ சேதுங் மட்டுமே இந்த மூன்று பதவிகளையும் 10 ஆண்டுகளுக்கு மேலாக வகித்து வந்தார்.
இச்சூழலில், செவ்வாயன்று, மத்திய ராணுவ ஆணையத்தின் மத்திய குழு மற்றும் மத்திய ராணுவ ஆணையத்திற்கு வியூக ரீதியான உத்தரவுகளையிடும் மத்திய ராணுவ ஆணையத்தின் கட்டளை மையத்தின் கூட்டு செயல்பாடுகளை ஷி ஜின்பிங் ஆய்வு மேற்கொண்டார். கட்டளை மையத்திற்கு வந்திருந்த ஷி ஜின்பிங்கிற்கு பாதுகாப்பு படைகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.
China will comprehensively strengthen its military training and preparation for any war, state broadcaster CCTV quoted China's President Xi Jinping as saying. https://t.co/zYP30vyvgx
— Kris Cheng (@krislc) November 8, 2022
சீன பாதுகாப்பு படைகளின் தலைவராக மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஷி ஜின்பிங் ராணுவத்திற்கு ஆற்றிய முதல் உரையில், "உலகம் ஒரு நூற்றாண்டில் கண்டிராத ஆழமான மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. சீனாவின் தேசிய பாதுகாப்பு நிலையற்ற மற்றும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கிறது. ராணுவ பணிகள் கடினமானதாகவே உள்ளது.
பாதுகாப்பு படைகளை தயார் நிலையில் வைக்க முழு ஆற்றலையும் ராணுவம் செலவிட வேண்டும். சண்டையிட்டு வெற்றி பெற திறனை மேம்படுத்த வேண்டும். திட்டத்தையும் இலக்கையும் திறம்பட நிறைவேற்ற வேண்டும். தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களை உறுதியுடன் பாதுகாக்கவும், கட்சி மற்றும் மக்களால் ஒப்படைக்கப்பட்ட பல்வேறு பணிகளை வெற்றிகரமாக முடிக்கவும் அறிவுறுத்துகிறேன்.
ராணுவத் தலைமையானது சீன ராணுவத்தின் நூற்றாண்டு இலக்கை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். 2027 ஆண்டளவில் சீன ராணுவத்தை ஒரு உலகத் தரம் வாய்ந்த ஆயுதப் படையாக மாற்ற வேண்டும். இதைச் செய்ய நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்" என்றார்.