China America Venezuela: “சர்வதேச சட்டத்த மீறாதீங்க“; அமெரிக்காவிற்கு சீனா கடும் கண்டனம் - எதற்காகன்னு தெரியுமா.?
அமெரிக்கா, மற்ற நாடுகளின் கப்பலை தன்னிச்சையாக கைப்பற்றுவது, சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வெனிசுலாவில் இருந்து சீனாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பலை அமெரிக்கா கைப்பற்றிய நிலையில், இதைத் தொடர்ந்து, மற்ற நாடுகளின் கப்பல்களை தன்னிச்சையாகக் கைப்பற்றும் அமெரிக்காவின் நடைமுறை சர்வதேச சட்டத்தை முற்றிலும் மீறுகிறது என்று கூறி சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவுத் துறை கூறியது என்ன.?
அமெரிக்காவிற்கு கண்டனம் தெரிவித்த சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், பிற நாடுகளின் கப்பல்களை தன்னிச்சையாக பறிமுதல் செய்வதன் மூலம், அமெரிக்கா சர்வதேச சட்டத்தை கடுமையாக மீறியுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், சர்வதேச சட்டத்தில் அடிப்படையற்ற அல்லது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அங்கீகாரம் இல்லாத அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான சட்டவிரோத தடைகளுக்கு எதிராகவும், பிற நாடுகளின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் எந்த ஒரு நடவடிக்கைக்கும் சீனா எதிராக நிற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதோடு, வெனிசுலாவிற்கு மற்ற நாடுகளுடன் பரஸ்பர நன்மை பயக்கும் உறவை வளர்த்துக் கொள்ளும் உரிமை உள்ளது என்றும், தனது நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாப்பதில், வெனிசுலாவின் நிலைப்பாட்டிற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு இருக்கும் தாங்கள் நம்புவதாகவும் லின் ஜியான் கூறியுள்ளார்.
வெனிசுலாவின் கப்பலை கைப்பற்றி எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
முன்னதாக, டிசம்பர் 20-ம் தேதி அன்று அதிகாலையில், அமெரிக்க கடலோரக் காவல்படை, பாதுகாப்புத் துறையின் ஒத்துழைப்புடன், முன்பு வெனிசுலாவில் நின்றிருந்த அந்த எண்ணெய் டேங்கரைக் கைப்பற்றியது என்றும் அமெரிக்க ராணுவம் டிசம்பர் 10-ம் தேதி அன்று வெனிசுலா கடற்கரைக்கு அருகில் ஒரு எண்ணெய் டேங்கரையும் கைப்பற்றியது என்றும் அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் தனது எக்ஸ் தள பதிவு வாயிலாக தெரிவித்திருந்தார்.
இதற்கு வெனிசுலா கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இது குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு நீண்ட பதிவில், வெனிசுலா, தென் அமெரிக்க வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய கடற்படை முற்றுகையால் சூழப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். அதோடு, இந்த முற்றுகை மேலும் அதிகரிக்கும் என்றும், அவர்கள் அமெரிக்காவின் எண்ணெய், நிலம் மற்றும் பிற சொத்துக்களை திருப்பித் தரும் வரை, அவர்கள் இதற்கு முன் கண்டிராத ஒரு அடியை எதிர்கொள்வார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வெனிசுலா அரசு வெளியிட்ட ஒரு அறிக்கையில், அமெரிக்க அதிபர் முற்றிலும் பகுத்தறிவற்ற முறையில், வெனிசுலா மக்களின் சொத்துக்களை கைப்பற்றுவதற்காகவும், வெனிசுலா மீது ஒரு கடற்படை ராணுவ முற்றுகையைத் திணிக்க விரும்புவதாகவும் கூறியது.





















