இந்திய பத்திரிகையாளர்களை வெளியேற்றும் சீனா.. இரு நாட்டு உறவில் அதிகரிக்கும் விரிசல்..! என்ன காரணம்?
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக உள்ள சீனாவில் இந்திய செய்தியாளர்களே இல்லாத சூழல் உருவாகியுள்ளது.
சமீப காலமாகவே, இந்திய- சீன உறவில் பதற்றம் நிலவி வருகிறது. குறிப்பாக, கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்கள் மோதி கொண்ட சம்பவம் இந்திய-சீன உறவில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த மோதலில், இரு நாட்டு ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.
தற்போது, எல்லை பிரச்னை இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றது. இப்படிப்பட்ட சூழலில், இந்திய பத்திரிகையாளர்களை தங்கள் நாட்டில் இருந்து சீனா வெளியேற்றி வரும் சம்பவம் பெரும் சிக்கலை உண்டாக்கியுள்ளது.
இந்திய பத்திரிகையாளர்களுக்கு விசா மறுப்பு:
இந்திய செய்தி நிறுவனங்களை சேர்ந்த நான்கு இந்திய செய்தியாளர்கள் சீனாவில் செய்தி சேகரித்து வந்தனர். இந்த சூழலில், இந்துஸ்தான் டைம்ஸை சேர்ந்த செய்தியாளர் கடந்த வார இறுதியில் சீனாவில் இருந்து வெளியேறினார். அதேபோல, இந்திய அரசுக்கு சொந்தமான பிரசார் பாரதி, இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான தி இந்து நாளிதழின் இரண்டு பத்திரிகையாளர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசா புதுப்பிக்க சீனா மறுத்துவிட்டது.
பதிலடியாக, சீன பத்திரிகையாளர்களையும் இந்தியா வெளியேற்றி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தங்கள் நாட்டில் இருந்து வெளியேறும்படி கடைசி இந்திய பத்திரிகையாளரையும் சீனா கேட்டு கொண்டுள்ளது. பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா நிருபரை இந்த மாதம் நாட்டை விட்டு வெளியேறுமாறு சீன அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதன் மூலம், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உள்ன சீனாவில் இந்திய செய்தியாளர்களே இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக, சீன வெளியுறவுத்துறை அமைச்சகமும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.
இந்திய சீன உறவில் மேலும் பின்னடைவு:
கடந்த மாதம் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், "இந்தியாவில் ஒரு சீன பத்திரிகையாளர் எஞ்சியிருப்பதாகவும், அவர் இன்னும் விசா புதுப்பிப்பிற்காகக் காத்திருப்பதாகவும்" கூறினார். முன்னதாக, சின்ஹுவா நியூஸ் ஏஜென்சி மற்றும் சீனா சென்ட்ரல் டெலிவிஷன் ஆகிய இரு பத்திரிகையாளர்களின் விசா புதுப்பித்தல் விண்ணப்பங்களை இந்திய அரசு நிராகரித்தது.
சீன நிருபர்கள் எந்தவித சிரமமும் இன்றி இந்தியாவில் செயல்பட்டு வருவதாக இந்திய அரசு இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்தது. ஆனால், சீனாவில் உள்ள இந்திய பத்திரிகையாளர்களுக்கு அப்படி இருப்பதில்லை என குற்றம்சாட்டியிருந்தது.
பத்திரிகையாளர்களுக்கு விசா மறுப்பது ஒன்றும் புதிதல்ல. இந்த விவகாரத்தில், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் பல ஆண்டுகளாக சிக்கல் நீடித்து வருகிறது. ட்ரம்ப் ஆட்சி காலத்தில், அமெரிக்காவில் பணிபுரியும் சீன பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இதற்கு பதிலடி தரும் வகையில், சீனாவில் நிருபர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை அமெரிக்க செய்தி நிறுவனங்களை சேர்ந்த செய்தியாளர்களுக்கு சீனா ரத்து செய்தது.