காசாவில் கொத்து கொத்தாக கொல்லப்படும் குழந்தைகள்.. கொதித்தெழுந்த கனட பிரதமர்
பெண்கள், குழந்தைகள், சிசுக்கள் கொன்று குவிப்பதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என கனட பிரதமர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் போர் நடந்து வருகிறது. உக்ரைனுக்கு எதிராக ரஷியா நடத்தி வரும் போரை காட்டிலும் பல மடங்கு தீவிரமான தாக்கத்தை இந்த போர் ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் உக்ரைன் போரை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இது, மேற்காசியாவை மிக பெரிய நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. தாக்குதலை ஹமாஸ் தொடங்கியிருந்தாலும், தங்களை தற்காத்து கொள்கிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் போர் மீறல்களில் ஈடுபட்டு வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் குழந்தைகள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டுள்ளது.
போரில் கொத்து கொத்தாக கொல்லப்படும் குழந்தைகள்:
காசாவில் நடந்து வரும் போரில் இதுவரை 11,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 40 சதவிகிதத்தினர் குழந்தைகள். பெண்களும் அதிக அளவில் கொல்லப்பட்டுள்ளனர். போரில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்பது போர் விதியாக இருக்கும் சூழலில், குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது தாக்குதல் நடத்தி இஸ்ரேல் அப்பட்டமான போர் மீறலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு, உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முக்கியத்துவம் வாய்ந்த கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். குழந்தைகள், பெண்கள் கொல்லப்படுவதை உலகம் பார்த்து வருவதாகவும் அதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "இஸ்ரேல் அரசு அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.
உலகம் பார்க்கிறது. டிவியில், சமூக ஊடகங்களில் மருத்துவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், போரில் உயிர் பிழைத்தவர்கள், பெற்றோரை இழந்த குழந்தைகளின் சாட்சியங்களை நாங்கள் கேட்டு வருகிறோம். பெண்கள், குழந்தைகள், சிசுக்களைக் கொன்று குவிப்பதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இது நிறுத்தப்பட வேண்டும்" என்றார்.
கனட பிரதமர் குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் பிரதமர் விளக்கம்:
கனட பிரதமர் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "ஹமாஸ்தான் பொறுப்பேற்க வேண்டும்.
இஸ்ரேல் அல்ல. வேண்டுமென்றே பொதுமக்களை குறிவைப்பது இஸ்ரேல் அல்ல. ஹோலோகாஸ்டுக்குப் பிறகு யூதர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மிக மோசமான கொடூர தாக்குதல்களை நடத்தியது ஹமாஸ்தான். பொதுமக்களின் தலையை துண்டித்து, எரித்து, படுகொலை செய்தது ஹமாஸ்.
பொதுமக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்திவிட்டு, பொதுமக்களுக்குப் பின்னால் மறைந்து கொள்வது என இரட்டைப் போர்க் குற்றத்தைச் செய்ததற்கு ஹமாஸ் பொறுப்பேற்க வேண்டும். ஹமாஸ் காட்டுமிராண்டித்தனத்தை முறியடிக்க நாகரீக சக்திகள் இஸ்ரேலை ஆதரிக்க வேண்டும்" என எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.