UK Election: முன்னரே வரும் பிரிட்டன் தேர்தல்: காரணம் என்ன? பயப்படுகிறாரா ரிஷி சுனக்! கணிப்பு யாருக்கு சாதகம்?
Britain Election: பிரிட்டன் பொதுத் தேர்தலானது, வருட இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜூலை 4 ஆம் தேதியே நடைபெறும் என்ற அறிவிப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது
பிரிட்டன் பொதுத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்நிலையில், தற்போதைய ஆட்சி நிர்வாகத்தில் இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியின் நிர்வாக காலம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவு பெறவுள்ளது. இதன் காரணமாக பொதுத் தேர்தலானது, 2024 ஆம் ஆண்டு இறுதியில் நடத்தப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பிரிட்டன் பொதுத் தேர்தலானது, வரும் ஜூலை மாதம் 4 ஆம் தேதியே நடத்தப்படும் என பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில், பிரிட்டனில் என்ன நடக்கிறது? தேர்தலை முன்னரே நடத்துவதற்கான காரணம் என்ன? தேர்தல் கருத்து கணிப்புகள் யாருக்கு சாதகமாக இருக்கின்றன என்பது குறித்து பார்ப்போம்.
பிரிட்டன் பொதுத் தேர்தல்:
பிரிட்டனை பொறுத்தவரை மிக முக்கிய மற்றும் பெரிய கட்சிகளாக கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி ஆகிய இரண்டை குறிப்பிடலாம். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் ரிசி சுனக் இருக்கிறார். தொழிலாளர் கட்சியின் தலைவராக சர் கியர் ஸ்டார்மர் இருக்கிறார்.
தற்போதைய பிரதமராக இருக்கும் ரிசி சுனக், சில தினங்களுக்கு முன்பு, திடீரென்று அறிவிப்பு வெளியிட்டார். அவர் தெரிவித்ததாவது, பொதுத் தேர்தலானது வரும் ஜூலை மாதம் 4 ஆம் தேதியே நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டார். மேலும் ஒவ்வொரு வாக்கிற்காகவும் தீவிரமாக போராடுவேன் எனவும் ரிசி சுனக் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவரான, தொழிலாளர் கட்சியின் தலைவர் சர் கியர் ஸ்டார்மர் தெரிவிக்கையில், இது மாற்றத்திற்கான நேரம் என தெரிவித்தார்.
ஏன் முன்னரே தேர்தல்?:
சில வாரங்களுக்கு முன்பு, பிரிட்டனில் உள்ளாட்சி தேர்தல் ( மேயர் தேர்தல் ) நடைபெற்றது. அதில், மொத்தம் உள்ள 11 இடங்களில் தொழிலாளர் கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றது, கன்சர்வேட்டிவ் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே பெற்றது. மேலும் இது கன்சர்வேட்டிவ் கட்சிக்கு படுதோல்வியாக பார்க்கப்பட்டது.
பிரிட்டன் பொதுத் தேர்தல் முன்னரே நடைபெறுவது குறித்து, சர்வதேச செய்திகள் தெரிவிக்கையில் , தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகளும் ஒரு காரணமாக தெரிவிக்கின்றன. ஏனென்றால், தொழிலாளர் கட்சிக்கு தேர்தல் கணிப்புகள் சாதகமாக இருக்கிறது என தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தேர்தலை இப்போதே நடத்துங்கள் என்றும் இல்லை என்றால் நிலைமை, எதிர்மறையாக இருக்க வாய்ப்பு ஏற்பட்டு விடும் என்று கன்சர்வேட்டிவ் கட்சியின் உட்கட்சிக்குள்ளே குரல்கள் எழ ஆரம்பித்தன. மேலும், தேர்தலை முன்னரே நடத்துமாறும், கட்சியினரே ரிசி சுனக்கிற்கு அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக தேர்தலை முன்னரே நடத்த திட்டமிட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
ஏன் கன்சர்வேட்டிவ் கட்சியினருக்கு எதிர்ப்பு:
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில், கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவி வகித்தார். அப்போது பிரதமர் உள்ளிட்ட கட்சி தலைவர்களே விதிகளை மீறி மது கொண்டாட்டங்களில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சில காலங்களுக்கு பிறகு , போரிஸ் தவறாக வழிநடுத்துவதாக் கூறி சில எம்.பி-க்கள் பதவி விலக ஆரம்பித்தனர். இதையடுத்து, போரிஸ் ஜான்சனும் பதவி விலகினார்.
பின்னர் பிரதமராக பதவியேற்ற லிஸ்ட்ரஸ், கிட்டத்தட்ட 50 நாட்களுக்குள்ளேயே பதவி விலக, ரிசி சுனக் பதவியேற்றார். ஆனால், ரிசி சுனக்கிற்கு மக்கள் வாக்களிக்கவில்லை, போரிஸ் ஜான்சனுக்குத்தான் வாக்களித்ததாக நினைப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், 3 பிரதமர்கள் கட்சிக்குள்ளேயே மாறியது, மக்களிடம் நம்பிக்கையை இழந்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
மேலும், இதுபோன்ற சூழலில் தேர்தல் வைத்தால், கன்சர்வேட்டிவ் கட்சி தோற்கும் என்றும் தேர்தல் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ரிஷி சுனக் சொன்னது என்ன?
இந்நிலையில், பொது தேர்தல் முன்னரே நடத்துவது குறித்து, ரிஷி சுனக் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தெரிவித்ததாவது, பிரிட்டன் பொருளாதாரம் ஃபிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளை விட வேகமாக வளர்ந்து வருகிறது, பணவீக்கம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
ஆகவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருளாதார ஸ்திரத்தன்மையை ஆபத்தில் ஆழ்த்தக்கூடாது. தெளிவான திட்டம் மற்றும் துணிச்சலான நடவடிக்கை மூலம் எதிர்காலத்தை வலுப்படுத்த வேண்டும் என தெரிவித்திருகிறார். இதையடுத்து, வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில், இப்போது இருந்தே நடவடிக்கை தேவை என்பதனால் முன்னரே தேர்தல் என்ற பொருள்படும் வகையில் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், பொதுத் தேர்தலின் கருத்து கணிப்பு முடிவுகள் ரிஷி சுனக்கிற்கு எதிராக இருக்கும் நிலையில், முன்னரே தேர்தலை நடத்தும் திட்டம், சாதகமாக இருக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Also Read: Pakistan Trade: கடும் வரி விதிப்பால் இந்தியாவுடனான வர்த்தகம் பாதிப்பு; நாங்கள் தயார்; முடிவு இந்தியாவிடம்தான்!