Iran President Death Impact: ஈரான் அதிபர் மறைவு: உயரும் தங்கம், கச்சா எண்ணெய் விலை; இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
Ebrahim Raisi Death Impact: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவானது, உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறப்பு செய்தியைத் தொடர்ந்து, தங்கம் விலையானது உயர்ந்தது மற்றும் கச்சா எண்ணெய் விலையும் பெரிய தாக்கத்தை கண்டுள்ளது.
ஈரான் அதிபர் மறைவு:
63 வயதான ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாணமான அஜர்பைஜான் எல்லைக்கு அருகே, மலைப்பாங்கான பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மேலும் , அந்த ஹெலிகாப்டர் விபத்தில், ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் உயிரிழந்தனர்.
இப்ராஹிம் ரைசியின் மரணமானது ஈரான், இஸ்ரேல் மற்றும் அதன் பிராந்தியத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும், இந்த தாக்கமானது, பொருளாதாரத்தில் கச்சா எண்ணெய், பங்குச் சந்தைகள் மற்றும் தங்கத்தின் விலையில் பிரதிபலிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு:
ஈரான் அதிபரின் மறைவுக்குப் பிறகு, தங்கத்தின் விலை திங்களன்று திடீரென உச்சத்தை எட்டியது என்றும். இன்றைய நிலவரப்படி, தங்கம் அவுன்ஸ் ( ஒரு அவுன்ஸ் = 28.34 கிராம் ) ஒன்றுக்கு 2,438.44 டாலராக ஆக இருந்த தங்கத்தின் விலையானது, 1% உயர்ந்து 2,449.89 டாலராக உயர்ந்தது என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையானது, தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துகளை நோக்கி, மக்களின் பார்வையை கொண்டு செல்லும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஈரானிய ஜனாதிபதியின் மரணத்தைத் தொடர்ந்து தங்கத்தின் விலைகள் உயர்ந்தது என்றும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கச்சா எண்ணெய்:
ஈரான் அரசு நிர்வாகத்தின் நிச்சயமற்ற தன்மையால், கச்சா எண்ணெய் சந்தைகளில் ஏற்ற இறக்கத்திற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஈரான் அதிபர் மரணத்தின் காரணமாக எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பாதிக்கப்படும் என பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர். இதன் காரணமாக கச்சா எண்ணெய் தேவையில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதால், ஆசிய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பங்குச் சந்தை:
ஈரான் அரசு நிர்வாகங்களில் நிலையற்ற போக்கின் காரணமாக, பங்குச் சந்தையில் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், முதலீட்டாளர்கள் பங்கு சந்தைகளிலிருந்து வெளியேறி, தங்கத்தில் முதலீடு செய்ய வாய்ப்பு உருவாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு என்ன பாதிப்பு:
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கச்சா எண்ணெய்யானது பெருமளவு இறக்குமதியை நம்பியுள்ள நிலையில், விலை ஏற்றமானது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் இறக்குமதி குறைய வாய்ப்புள்ளதால்,இந்தியாவின் தேவையில் பாதிப்பு உருவாகலாம்.
இதையடுத்து தேவைக்கான பற்றாக்குறை காரணமாக, இந்தியாவில் ஓரிரு நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது உயர்வதற்கான வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Also Read: ரைசியின் மறைவை தொடர்ந்து ஈரானின் இடைக்கால அதிபராகும் முஹம்மது முக்பர்.. யார் இவர்?