Pakistan Trade: கடும் வரி விதிப்பால் இந்தியாவுடனான வர்த்தகம் பாதிப்பு; நாங்கள் தயார்; முடிவு இந்தியாவிடம்தான்!
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதித்ததால் இந்தியாவுடனான வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கடந்த மார்ச் மாதம், லண்டனில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, இந்தியாவுடன் வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க பாகிஸ்தான் வணிகர்கள் ஆர்வத்துடன் இருப்பதாக தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதித்ததால் இஸ்லாமாபாத்துக்கும் புது தில்லிக்கும் இடையிலான வர்த்தக உறவுகள், 2019 ஆம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் வர்த்தக சிக்கல்:
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சேர்ந்த ஷர்மிளா ஃபரூக், பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார், அண்டை நாடுகளுடன், குறிப்பாக இந்தியாவுடனான உறவுகளில் பாகிஸ்தான் எதிர்கொள்ளும் வர்த்தக சவால்கள் பற்றிய விவரங்களைக் கோரி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு, நேற்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர், எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருந்தார்.
அதில் தெரிவிக்கப்பட்டதாவது, 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பிறகு “பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 சதவீத வரி விதிக்க இந்தியா முடிவு செய்தது. மேலும் காஷ்மீர் பேருந்து சேவை மற்றும் வர்த்தகத்தையும் நிறுத்தியது போன்ற கட்டுப்பாடுகளை விதித்தது. ஆகஸ்ட் 5, 2019 அன்று இந்திய நாடாளுமன்றம் 370 வது பிரிவை நீக்கம் செய்த பின்னர், பாகிஸ்தான் இந்தியாவுடனான தனது உறவைக் குறைத்தது, மேலும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழல் சரிவைக் கண்டது.
உரையாடலுக்கு தயாராக இருக்கிறோம்:
"இந்தியாவுடனான ஜம்மு மற்றும் காஷ்மீரின் முக்கிய பிரச்னை உட்பட அனைத்து நிலுவையில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான உரையாடலுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்றும் தார் சனிக்கிழமை கூறினார். இந்நிலையில் அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பு இப்போது டெல்லிக்குதான் உள்ளது என்றும் வெளியுறவு அமைச்சர் கூறினார்.
மார்ச் மாதம், லண்டனில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, இந்தியாவுடன் வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க பாகிஸ்தானின் வணிகர்கள் ஆர்வத்துடன் இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், 2019-ஆம் ஆண்டிலிருந்து "வர்த்தக உறவுகளை இந்தியாவுடன் மீண்டும் தொடங்கும் திட்டம் பாகிஸ்தானுக்கு இல்லை” என்று அவரது அலுவலகம் பின்னர் தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.
நீடிக்கும் சிக்கல்:
காஷ்மீர் பிரச்சினை மற்றும் பாகிஸ்தானில் இருந்து வெளிப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் போன்றவற்றின் காரணமாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவுகளானது, சிக்கலாகவே உள்ளது.இதனால், இரண்டு நாடுகளுக்கிடையிலான வர்த்தகமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.