BRICS New Delhi declaration : பிரிக்ஸ் உச்சிமாநாடு... தவறியும் 'தலிபான்' பெயரை பயன்படுத்தாத தலைவர்கள்!
ஆப்கான் விவகாரத்தில் கடந்தாண்டு பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட மாஸ்கோ பிரகடனத்துக்கும், டெல்லி பிரகடனத்துக்கும் சில குறிப்பிட்ட மாறுபாடுதல் இருப்பதாக பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்
ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறையை உறுதிப்படுத்தும் வகையில் ஆப்கான் தலைமையிலான பேச்சுவார்த்தைத் தேவை என பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்கள் மீண்டும் வலியூறித்தின.
பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான 13-வது உச்சிமாநாடு பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரேசில் அதிபர் திரு ஜெயிர் போல்சொனாரோ, ரஷிய அதிபர் மேதகு விளாடிமிர் புதின், சீன அதிபர் மேதகு ஜின்பிங், தென்ஆப்பிரிக்க அதிபர் மேதகு சிரில் ரமாபோசா ஆகியோர் பங்கேற்றனர்.இதில், புதுடெல்லி பிரகடனத்தை பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டார்கள்.
தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் சர்வதேச பொருளாதாரத்தை ஊக்குவிப்பதில் பிரிக்ஸ் அமைப்பு மிக முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், நடைபெற்ற முதல் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு என்பதால் இது பலராலும் கவனிக்கப்பட்டு வந்தது.
இருப்பினும், நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்ட புது டெல்லி பிரகடனத்தில், தாலிபான் பற்றிய எந்தவித குறிப்பும் இடம்பெறவில்லை. மாறாக, ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறையை உறுதிப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், "ஆப்கானிஸ்தானில் நீடித்த அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக, அந்நாட்டு நிலப்பரப்பை தீவிரவாதிகளின் புகலிடங்களாக பயன்படுத்தவும், தீவிரவாத செயல்களுக்கு வருவாய் ஈட்டித் தரும் பெரிய ஆதாரமாகவும் விளங்கும் போதைப் பொருள் வர்த்தகத்தை செயல்படுத்தும் பயங்கரவாத அமைப்புகளின் முயற்சிகளைத் தடுப்பது உட்பட பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறோம்"என்று தெரிவிக்கப்பட்டது.
சமீபத்தில், நூற்றுக்கும் அதிகமானோரை பலி கொண்ட காபுல் சர்வதேச விமான நிலையத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடுமையாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் கடந்தாண்டு பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட மாஸ்கோ பிரகடனத்துக்கும், புதுடெல்லி பிரகடனத்துக்கும் சில குறிப்பிட்ட மாறுபாடுதல் இருப்பதாக பாதுகாப்பு நிபுணர் சுபஜித் ராய் தெரிவித்துள்ளார்.
உதாரணமாக, மாஸ்கோ பிரகடனத்தில்,"ஒற்றுமையான, இறையாண்மைமிக்க, ஜனநாயக, வளமும் அமைதியும் நிறைந்த ஆப்கானிஸ்தானுக்கு எங்கள் ஆதரவை வழங்குகிறோம். மேலும், ஆப்கானிஸ்தானில், ஆப்கான் தலைமையிலான, ஆப்கானுக்குச் சொந்தமான, ஆப்கான் கட்டுப்பாட்டில் உள்ள (Afghan-led, Afghan-owned and Afghan-controlled), உள்ளடக்கிய அமைதி நடைமுறைக்கு ஆதரவு அளிப்பதில் பிரிகிஸ் அமைப்பு நாடுகள் உறுதியுடன் உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், புது டெல்லி பிரகடனத்தில், இறையாண்மைமிக்க ஆப்கானிஸ்தான், ஆப்கான் தலைமையிலான அமைதி நடைமுறை குறித்த எந்த குறிப்புகளும் இடம்பெறவில்லை.
எவ்வாறாயினும், பிரிக்ஸ் அமைப்பில் உள்ள இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தாலிபான் அரசியல் தலைவர்களுடன் தங்கள் பேச்சுவரத்தையைத் தொடங்கியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 31 அன்று, கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் கத்தாரின் இந்தியத் தூதரான தீபக் மிட்டல் தலிபான் அமைப்பின் மூத்த தலைவரான ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாயுடன் சந்திப்பை மேற்கொண்டார்.
தாலிபான் அமைப்பினர் ஆப்கானிஸ்தானைக் கட்டுப்பாட்டில் எடுத்தவுடன் இந்தியாவுடனான முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பு இது என இந்திய வெளியுறவுத் துறையின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டது.
பிரிக்ஸ் இந்தியா தலைமை: ‘பிரிக்ஸ்' உச்சி மாநாட்டுக்கு பிரதமர் திரு மோடி தலைமை தாங்குவது இது 2-வது முறையாகும். முன்னதாக 2016-ம் ஆண்டு கோவாவில் நடந்த மாநாட்டுக்கு அவர் தலைமை தாங்கினார். இந்த ஆண்டு இந்தியா தலைமை தாங்கி நடத்திவரும் உச்சி மாநாடு, பிரிக்ஸின் பதினைந்தாவது ஆண்டு விழாவுடன் ஒத்துப்போகிறது.
இதன் காரணமாக, பிரிக்ஸ்-15: ஒத்துழைப்பு தொடா்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமித்த கருத்துக்கான ‘பிரிக்ஸ்’ நாடுகளிடையேயான ஒத்துழைப்பு’ என்ற கருப்பொருளைக் கொண்டு இந்த ஆண்டிற்கான மாநாடு நடத்தப்பட்டது.