Tommy Oliver : பிளாக் ரேஞ்சராக கலக்கிய டாக்டர் டாமி ஆலிவர் மரணம்...சோகத்தில் மூழ்கிய 90'ஸ் கிட்ஸ்...!
நாஸ்டால்ஜிக்குகள் நிறைந்த பவர் ரேஞ்சர்ஸின் மிகவும் பிரபலம் அடைந்த தொடர் பவர் ரேஞ்சர்ஸ் டைனோ தண்டர். அதில், பிளாக் ரேஞ்சராக வந்து கலக்கிய டாக்டர் டாமி ஆலிவர் மரணம் அடைந்துள்ளார்.
"இன்பங்கள் வந்தாலும் துன்பங்கள் பறந்தோடும், பவர் ரேஞ்சர்ஸ்தான், பவர் ரேஞ்சர்ஸ்தான்" என்ற பாடலை 90'ஸ் கிட்ஸ் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
ஆமாம், பள்ளியை முடித்துவிட்டு அவசர அவசரமாக வீட்டிற்கு ஓடி வந்து, மாலை 4:30 மணிக்கு டூன் டிஸ்னியில் ஒளிபரப்பப்படும் பவர் ரேஞ்சர்ஸை பார்ப்பதற்கு ஒரே கூட்டமே இருந்தது.
ஒரு கட்டத்தில், பவர் ரேஞ்சர்ஸ் காப்பாற்றுவார்கள் என மாடியில் இருந்து சிறுவர்கள் குதித்த தருணம் எல்லாம் அரங்கேறியது. அந்தளவுக்கு, 90'ஸ் கிட்ஸ் மத்தியில் பவர் ரேஞ்சர்ஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
நாஸ்டால்ஜிக்குகள் நிறைந்த பவர் ரேஞ்சர்ஸின் மிகவும் பிரபலம் அடைந்த தொடர் பவர் ரேஞ்சர்ஸ் டைனோ தண்டர். அதில், பிளாக் ரேஞ்சராக வந்து கலக்கிய டாக்டர் டாமி ஆலிவர் மரணம் அடைந்துள்ளார். இவரின் உண்மையான பெயர் ஜேசன் டேவிட் பிராங்க். இவருக்கு வயது 49.
2000த்தின் மத்தியில் பவர் ரேஞ்சர்ஸை பார்க்க தொடங்கி இருந்தால், டாமி ஆலிவரை, முதன்முதலில் டைனோ தண்டரில்தான் பார்த்திருப்பீர்கள். ஆனால், அதற்கு முன்பே பல பவர் ரேஞ்சர்ஸ் தொடர்களில் டாமி ஆலிவர் நடத்திருப்பது பின்னர் ஒளிபரப்பப்பட்ட பழைய தொடர்களின் மூலம்தான் 90'ஸ் கிட்ஸ்களுக்கு தெரிய வந்தது.
ஆம், Mighty Morphin Alien Rangers, Power Rangers Zeo, Power Rangers Turbo என பல பவர் ரேஞ்சர்ஸ் தொடர்களில் டாக்டர் டாமி ஆலிவர் அசத்தி இருப்பார். அதுமட்டும் இன்றி, Power Rangers Wild Force, Power Rangers S.P.D. ஆகிய தொடர்களில் ஒரு எபிசோட் மட்டுமே வந்திருந்தாலும் வில்லன்களை மிரட்டு எடுத்து சும்மா அதகளம் செய்திருப்பார்.
டைனோ தண்டரில், பெரிய கருப்பு டைனோசர் ஸ்வார்டில் வந்து 90'ஸ் கிட்ஸை வியப்பில் ஆழ்த்தியவர். அந்த டைமில் வெளியான பவர் ரேஞ்சர்ஸ் கார்டு கேமில் நம்பர் 1 ரேங்க் ரேஞ்சர் டாமி ஆலிவர்தான். தற்போது இவரது இறப்பு செய்தி 90'ஸ் கிட்ஸை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவர் எப்படி இறந்தார், எப்போது இறந்தார் என்பது குறித்த தகவல் தெரியவில்லை. டாமி ஆலிவரின் மரண செய்தியை பகிர்ந்த அவரது மேலாளர் ஜஸ்டின் ஹன்ட், "பிராங்க் காலமானார். இந்த சோகமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் தனியுரிமையை மதிக்குமாறு நாங்கள் கேட்டு கொள்கிறோம். அத்தகைய அற்புதமான மனிதனின் இழப்பை நாம் புரிந்துகொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
Mighty Morphin Power Rangersஇல் பிளாக் ரேஞ்சராக டாமி ஆலிவருடன் கலக்கிய வால்டர் இம்மானுவேல் ஜோன்ஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "என்னால் நம்ப முடியவில்லை. எங்கள் குடும்பத்தின் மற்றொரு உறுப்பினரை இழந்ததில் என் மனது வருத்தத்தில் இருக்கிறது" என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Mighty Morphin Power Rangers-இல் எல்லோ ரேஞ்சராக நடித்த துய் ட்ராங், கடந்த 2001ஆம் ஆண்டு, கார் விபத்தில் உயிரிழந்தார்.