Watch Video: அன்று இலங்கை.. இன்று வங்கதேசம்.. பிரதமரின் படுக்கையறையை விட்டுவைக்காத போராட்டக்காரர்கள்!
வங்கதேசத்தில் பிரதமர் மாளிகையில் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்து பொருள்கள் அனைத்தையும் சூறையாடினர். பொருளாதார நெருக்கடியின்போது, இலங்கையில் நடந்த சம்வபங்கள் வங்கதேசத்தில் நடந்து வருகிறது.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பிரதமராக பதவி வகித்து வந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்தி வந்த மக்கள், இன்று பிரதமர் மாளிகையில் நுழைந்தனர்.
வங்கதேசத்தில் என்னதான் பிரச்னை? பின்னர், பிரதமர் மாளிகையை சூறையாடினர். நிலைமை மோசமாவதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்புதான், தலைநகர் டாக்காவில் இருந்து ஷேக் ஹசீனா தப்பினார். ஹெலிகாப்டர் மூலம் அவர் இந்தியா வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கடந்த 2022ஆம் ஆண்டு, இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் நடத்திய போராட்டம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது, வங்கதேசத்தில் நடக்கும் சம்பவங்கள் அன்று இலங்கையில் நடந்தன.
இலங்கையில் அதிபர் மாளிகையில் நுழைந்த போராட்டக்காரர்கள், அதனை சூறையாடினர். மாளிகையில் உள்ள பொருள்களை எடுத்து கொண்டு வெளியேறினர். அதேபோன்றுதான் வங்கதேசத்திலும் நடந்து வருகிறது. இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
Bangladesh protesters storm the Prime Minister's palace, reminiscent of similar footage from Sri Lanka's 2022 protests
— Azzam Ameen (@AzzamAmeen) August 5, 2024
📸 Bangladeshi-Bengali TV station Channel 24. pic.twitter.com/TGYZNIPytP
இதற்கிடையே, இடைக்கால அரசை ராணுவம் அமைக்க உள்ளதாக வங்கதேச ராணுவ தளபதி வேக்கர்-உஸ்-ஜமான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அமைதியாக இருக்கும்படி போராட்டக்காரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் மாளிகையை சூறையாடிய போராட்டக்காரர்கள்: நேற்று நடந்த போராட்டத்தில் மட்டும் 98 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த மாதம், போராட்டம் தொடங்கியதில் இருந்து இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இந்தியா வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசு வேலைவாய்ப்புகளில் உள்ள இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என தொடங்கிய போராட்டம், மிக மோசமான கலவரமாக மாறியது. வங்கதேச அரசு வேலைவாய்ப்புகளில் மொத்தம் 56 சதவிகிதம் இடஒதுக்கீடு அமலில் இருந்தது. கடந்த 1971ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிரான விடுதலை போரில் ஈடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.
சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டுடன் சேர்த்து மற்ற இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2018ஆம் ஆண்டு, இடஒதுக்கீட்டை ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு ரத்து செய்தது.
ஆனால், இடஒதுக்கீட்டை ரத்து செய்தது செல்லாது என கடந்த மாதம் கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுதான் கலவரத்திற்கு காரணமாக அமைந்தது. கீழமை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் வழங்கப்படவிருந்தது. ஆனால், மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்த காரணத்தால் வழக்கின் தீர்ப்பை முன்கூட்டியே வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். அந்த வகையில், இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வந்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவு செல்லாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.