பணி நேரத்திற்கு பிறகு நோ டிஸ்டர்பன்ஸ்.. தொழிலாளர்கள் உரிமைகளை பாதுகாக்க சூப்பர் சட்டம்.. செம்ம!
பணி நேரத்திற்கு பிறகு அலுவலகத்தில் இருந்து வரும் அழைப்புகளை நிராகரிக்கும் உரிமையானது தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களை ஒடுக்கும் போக்கு காலம் காலமாக நடந்து வருகிறது. அதற்கு எதிராக தொழிலாளர்கள் மேற்கொண்ட புரட்சி, பல நாடுகளில் சுரண்டலை முடிவுக்கு கொண்டு வந்தது. இருந்தபோதிலும், சில நாடுகளில் உழைக்கும் வர்க்கத்தை பெரு நிறுவனங்கள் சுரண்டி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் சூப்பர் சட்டம்: அதற்கு எதிராக பல சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, ஆஸ்திரேலியாவில் ஒர் அதிரடி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பணி நேரத்திற்கு பிறகு அலுவலகத்தில் இருந்து வரும் அழைப்புகளை நிராகரிக்கும் உரிமையானது தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், 'Right to connect' என்ற பெயரில் அந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பணி நேரம் முடிந்த பிறகு, அலுவலகத்தில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள், இ மெயில், மெசேஜ் ஆகியவற்றை தவிர்க்கும் உரிமை ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அலுவலக அழைப்புகளை ஏற்காமல் தவிர்க்கலாம்:
நாளை மறுநாள் முதல் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது. ஆனால், அழைப்புகளை ஏற்காமல் இருக்க பணியாளர்கள் நியாயமான காரணங்களை கொண்டிருக்க வேண்டும். ஒரு பணியாளரின் மறுப்பு நியாயமற்றதா என்பதை தீர்மானிக்கும் போது சில காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்:
- எதற்காக தொடர்பு கொள்கிறார்கள்?
- எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள். அது பணியாளருக்கு எவ்வளவு இடையூறு விளைவிக்கிறது.
- பணி நேரத்திற்கு பிறகு, வேலையைச் செய்யத் தொடர்பு கொள்ள ஊழியருக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படுகிறாரா அல்லது கூடுதல் ஊதியம் பெறுகிறாரா?
- பணியாளரின் தனிப்பட்ட சூழ்நிலைகள், குடும்பம் அல்லது பொறுப்புகள் உள்ளிட்டவற்றை கவனித்தில் கொள்ள வேண்டும்.
இந்த சட்டத்தில் பல குறைகள் இருப்பதாகவும் அவசரம், அவசரமாக சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இம்மாதிரியான சட்டம் இயற்றப்படுவது இது முதல்முறை அல்ல. பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இம்மாதிரியான சட்டம் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளது.
பெல்ஜியம், இத்தாலி, அர்ஜென்டினா, சிலி, லக்சம்பர்க், மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், ரஷியா, ஸ்லோவாக்கியா, ஸ்பெயின், ஒன்டாரியோ, அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்த சட்டம் அமலில் உள்ளது.