காங்கோவில் பயங்கரவாத தாக்குதல் – பொதுமக்கள் 55 பேர் பலி – என்ன நடந்தது?
காங்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்கள் 55 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்கள் 55 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ஆப்பிரிக்கா நாடான காங்கோவில் உள்நாட்டு போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனிடையே காங்கோவில் பல பயங்கரவாத அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத கும்பல் அவ்வபோது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது உண்டு. இதில் பொதுமக்கள் பலர் அநியாயமாக துப்பாக்கிச்சூட்டுக்கு பலியாவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. அதேபோல் பாதுகாப்பு படையினர் மீதும் இந்த பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்துவதுண்டு.
இந்நிலையில் காங்கோவின் இடுரி மாகாணம் பஹிமா பட்ஜிரா பகுதியில் உள்ள கிராமங்களில் பயங்கரவாதிகள் நேற்று திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் பொதுமக்கள் 55 பேர் உயிரிழந்தனர். மேலும் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர். எரிந்த வீடுகளில் இருந்து உடல்கள் தொடர்ந்து மீட்கப்படுவதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து முகாமின் தலைவர் அன்டோயின்னெட் நசலே கூறுகையில், “திங்கட்கிழமை இரவு இதுரி மாகாணத்தில் உள்ள டிஜைபா கிராமக் குழுவை CODECO போராளிக்குழுவைச் சேர்ந்த ஆயுதமேந்திய நபர்கள் தாக்கினர். இதில் 55 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம். உடல்கள் இன்னும் எரிந்த வீடுகளில் இருந்து மீட்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
CODECO என்பது, லெண்டு இன விவசாய சமூகத்தைச் சேர்ந்த போராளிக் குழுக்களின் சங்கம் ஆகும். இந்தக் குழுவின் தாக்குதல்களில் நான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1,800 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று பயங்கரவாதம் குறித்த ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான ஆப்பிரிக்க மையம் தெரிவித்துள்ளது.
சில தாக்குதல்கள் போர்க்குற்றங்களாகவும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாகவும் இருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் இடம்பெயர்ந்த மக்கள், அவர்கள் கத்திகள் மற்றும் துப்பாக்கிகளால் கொல்லப்பட்டனர் என்று டிஜைபாவில் வசிக்கும் மும்பேர் டேவிட் தெரிவித்தார்.
செப்டம்பரில், திங்கட்கிழமை இரவு தாக்கப்பட்ட அதே பிரதேசமான டிஜுகுவில் CODECO போராளிகள் குறைந்தது 20 பொதுமக்களைக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

