இலங்கை அதிபர் தேர்தல்.. அனுரா குமார திசாநாயக்க வெற்றி!
இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. ஜனதா விமுக்தி பெரமுன கட்சி தலைவர் அனுரா குமார திசாநாயக்க வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பாக போட்டியிட்ட ஜனதா விமுக்தி பெரமுன கட்சி தலைவர் அனுரா குமார திசாநாயக்க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இலங்கையின் 9ஆவது அதிபராகிறார் அனுரா குமார திசாநாயக்க.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் அதிபர் தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகவும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. 38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரமதாச, தேசிய மக்கள் சக்தி கூட்டணி தலைவர் அனுரா குமார திசநாயக்க ஆகியோரே முக்கிய வேட்பாளர்களாக கருதப்பட்டனர்.
இலங்கை வரலாற்றில் முதல்முறை:
தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று இரவு முதல் எண்ணப்பட்டு வந்தது. இலங்கை தேர்தல் முறைப்படி, 50 சதவிகிதத்திற்கு மேலான வாக்குகள் யாருக்கு கிடைக்கிறதோ அவரே வெற்றியாளர் ஆவார். ஆனால், முதல் சுற்றில் யாருக்கும் 50 சதவிகித வாக்குகள் கிடைக்கவில்லை.
அனுரா குமார திசநாயக்காவுக்கு 42.31 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைத்தது. அதற்கு அடுத்தப்படியாக, சஜித் பிரமதாசாவுக்கு 32.76 சதவிகித வாக்குகள் கிடைத்தது. யாருக்கும் 50 சதவிகித வாக்குகள் கிடைக்காத காரணத்தால் இரண்டாவது சுற்று வாக்குகள் எண்ணப்பட்டது.
இரண்டாவது சுற்றில் முதல் இரண்டு இடத்தில் உள்ள வேட்பாளர்களின் வாக்குகள் மட்டுமே எண்ணப்படும். அதில், யாருக்கு அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இலங்கை வரலாற்றில் முதல்முறையாக இரண்டாவது சுற்று வாக்குகள் எண்ணப்பட்டது.
Official: Anura Kumara Dissanayake has won the 2024 Sri Lanka Presidential Election. He will be the 9th Executive President of Sri Lanka pic.twitter.com/eDFwA1eFFI
— Azzam Ameen (@AzzamAmeen) September 22, 2024
முதல் சுற்றை போன்று இரண்டாவது சுற்றிலும் அனுரா குமார திசநாயக்காவுக்கே அதிக வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து, அனுரா குமார திசநாயக்க வெற்றி பெற்றதாக இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வெற்றியை தொடர்ந்து பேசிய திசநாயக்கா, "பல நூற்றாண்டுகளாக நாம் வளர்த்து வந்த கனவு இறுதியாக நனவாகியுள்ளது. இந்த சாதனை ஒரு நபரின் தனிப்பட்ட உழைப்பால் நடக்கவில்லை. ஆனால் நூறாயிரக்கணக்கானவரின் கூட்டு முயற்சி" என்றார்.