அடேங்கப்பா..! இதுவரை 16 குழந்தைகள்.. அடுத்தது ஆன் தி வே... பெயரைத் தேடும் அமெரிக்க தம்பதி!
அமெரிக்காவில் 16 குழந்தைகளைப் பெற்றுள்ள தம்பதி ஒன்று, தங்கள் 17வது குழந்தைக்குப் பெயர் சூட்டுவதற்குப் பரிசீலித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் 16 குழந்தைகளைப் பெற்றுள்ள தம்பதி ஒன்று, தங்கள் 17வது குழந்தைக்குப் பெயர் சூட்டுவதற்குப் பரிசீலித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் சார்லோட் பகுதியைச் சேர்ந்த பேட்டி ஹெர்னாண்டஸ் என்ற பெண்ணும் அவரது கணவரும் தற்போது தங்களின் 17வது குழந்தைக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். தான் ஆரோக்கியமாக இருப்பதால் மீண்டும் கருத்தரிக்கும் நம்பிக்கை இருப்பதாகவும் கூறுகிறார் பேட்டி ஹெர்னாண்டஸ்.
தனது 16 குழந்தைகளின் பெயர்களும் `C' என்கிற ஆங்கில எழுத்தில் தொடங்குமாறு சூட்டியுள்ள பேட்டி ஹெர்னாண்டஸ், அவ்வாறு செய்வது, குழந்தைகளின் தந்தையான கார்லோஸுக்காக அவ்வாறு செய்வதாகத் தெரிவித்துள்ளார். இதே வழிமுறையை அடுத்த குழந்தைக்கும் பின்பற்றவுள்ளதாக இந்தத் தம்பதினர் தெரிவித்துள்ளனர்.
`நாங்கள் எங்கள் 17வது குழந்தைக்காக முயன்று வருகிறோம். நாங்கள் கடவுளின் ஆசையை நிறைவேற்றி வருகிறோம். எங்கள் குடும்பம் பெருக வேண்டும் என கடவுள் விரும்பினால் அதனைச் செய்ய வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை. நான் மீண்டும் கருத்தரிப்பேன் என்பது எனக்கு தெரியும். நான் ஆரோக்கியமாக இருப்பதோடு, கடவுளை நம்புகிறேன். அடுத்த குழந்தை ஆணாக இருந்தால் கார்டர் எனவும், பெண்ணாக இருந்தால் க்ளேர் எனவும் பெயர் சூட்டுவதாக முடிவு செய்துள்ளோம்’ என்று கூறுகிறார் 16 குழந்தைகளின் தாயான பேட்டி ஹெர்னாண்டஸ்.
சொந்தமாக துப்புரவு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் பேட்டி ஹெர்னாண்டஸ், கடந்த ஆண்டு மே மாதம் தன்னுடைய 16வது குழந்தையான க்ளேட்டனைப் பெற்றெடுத்தார். தன்னுடைய பிரசவ வலிகளிலேயே அதுதான் மிகுந்த வலி கொண்டதாக இருந்த போதும், அதனைக் கடவுளின் ஆசியாகக் கருதுவதாகவும், மேலும் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை விரும்புவதாகவும் கூறுகிறார் பேட்டி ஹெர்னாண்டஸ்.
க்ளேட்டன் பிறப்பதற்கு முன்பு, பேட்டி ஹெர்னாண்டஸும் அவருடைய கணவரும் குழந்தையின் பெயரைச் சூட்ட திணறியதாகத் தெரிவிக்கிறார். `நாங்கள் பெயர் சூட்ட கடுமையாக முயன்றோம். திடீரென என் மனதில் `க்ளேட்டன்’ என்ற பெயர் தோன்றியது. அனைத்து குழந்தைகளின் பெயரும் `C' என்ற எழுத்தில் தொடங்குவதாக முடிவு செய்து, அதனைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். என் கணவரின் பெயர் கார்லோஸ். எனவே அவரின் வழியை ஒட்டி, குழந்தைகளுக்கும் அவ்வாறு பெயர் சூட்டி வருகிறோம்’ எனக் கூறும் பேட்டி ஹெர்னாண்டஸ் இணையத்தில் அவரைக் குறித்த கருத்துகளுக்குப் பதிலளித்துள்ளார்.
`கடவுள் எனக்கு இவ்வளவு குழந்தைகளால் ஆசிர்வதித்துள்ளார். சிலர் இதனை ஏற்றுக் கொள்ளாததோடு, ஆன்லைனில் மோசமாக எழுதுகின்றனர். ஆனால் எங்களுக்கு இது பெரிய ஆசிர்வாதம் ஆகும். எனக்கு பெரிய குடும்பம் உருவாகும் என்று நான் நினைக்கவே இல்லை. ஆனால் திடீரென `இது நன்றாக இருக்கிறதே!’ எனத் தோன்றியது. இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கடவுள் எங்களுக்கு அடுத்த குழந்தை பிறக்கும் என நினைத்தால் நாங்கள் அடுத்த குழந்தையைப் பெற்றுக் கொள்வோம்’ என்கிறார் பேட்டி ஹெர்னாண்டஸ்.
பேட்டி ஹெர்னாண்டஸும் அவரது கணவரும் தங்கள் குழந்தைகளின் உணவுக்காக மாதம் தோறும் சுமார் 1300 பவுண்ட்களைச் செலவிடுவதாகவும், அரசு உதவித்தொகையை எதுவும் பெறுவதில் விருப்பம் இல்லை எனவும் கூறியுள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் 1.3 லட்சம் ரூபாய் ஆகும்.