தூதர்கள் வெளியேற்றம்; இந்தியா எடுத்த நடவடிக்கை - கனடாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன் ஆதரவு
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில், மேற்குலக நாடுகள் இந்தியாவை நேரடியாக கண்டிக்காமல் தயக்கம் காட்டி வருகிறது.
கனட நாட்டைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை உலக நாடுகளை பரபரப்பில் ஆழ்த்தியது. கடந்த ஜூன் மாதம் நடந்த இந்த கொலை தொடர்பாக கனட நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்த குற்றச்சாட்டே, உலக நாடுகள் முழுவதும் பரபரப்பு ஏற்பட காரணமாக அமைந்தது.
இந்திய, கனட உறவில் தொடரும் விரிசல்:
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என்று ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்தை முற்றிலுமாக நிராகரித்த இந்தியா, அதற்கு கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரம் இரு நாட்டு உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது.
இந்தியாவுக்கு எதிராக கனடாவும், கனடாவுக்கு எதிராக இந்தியாவும் மாறி மாறி நடிவடிக்கைகள் எடுத்தன. அந்த வகையில், தூதரக அதிகாரிகளை திரும்ப பெற வேண்டும் என கனடாவுக்கு இந்தியா அறிவுறுத்தல் வழங்கியது. அதை ஏற்ற கனடா, தங்களின் தூதரக அதிகாரிகளில் 41 பேரை அண்மையில் திரும்பப் பெற்றது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் கனடாவுக்கு ஆதரவாக அமெரிக்காவும் பிரிட்டனும் கருத்து தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள கனட தூதரகத்தின் அதிகாரிகளை குறைக்கும்படி கனடாவை வலியுறுத்த வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளது.
"இந்தியா விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்"
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், "இந்தியா அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று, தனது தூதரக அதிகாரிகளை கனடா கணிசமாக குறைத்திருப்பது கவலை அளிக்கிறது. கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு தூதர்கள் களத்தில் இருக்க வேண்டும்.
கனடாவின் தூதரக அதிகாரிகளை குறைக்க வலியுறுத்த வேண்டாம் என்றும், நடந்து வரும் கனட விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் இந்திய அரசை வலியுறுத்தியுள்ளோம். 1961 வியன்னா மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட தூதரக உறவுகள் தொடர்பான ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா தனது கடமைகளை நிறைவேற்றும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார்.
இது தொடர்பாக பேசிய பிரிட்டன் வெளியறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர், "கனட தூதரக அதிகாரிகள் இந்தியாவை விட்டு வெளியேறும் வகையில் இந்திய அரசாங்கம் எடுத்த முடிவுகளுடன் நாங்கள் உடன்படவில்லை" என்றார்.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில், மேற்குலக நாடுகள் இந்தியாவை நேரடியாக கண்டிக்காமல் தயக்கம் காட்டி வருகிறது. உலக வல்லரசாக உருவெடுத்துள்ள சீனாவுக்கு இந்தியா மூலம் செக் வைக்க மேற்குலக நாடுகள் திட்டமிட்டு வருவதாகவும் இதன் காரணமாகவே இந்தியாவுடனான உறவை பகைத்து கொள்ள மேற்குலக நாடுகள் விரும்பவில்லை என புவிசார் நிபுணர்கள் கூறுகின்றனர்.