US President Election: ட்ரம்புக்கு எதிராக களமிறங்கும் 3வது இந்திய வம்சாவளி..குடியரசு கட்சியில் கடும் போட்டி.. அமெரிக்க அதிபர் வேட்பாளர் யார்?
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் 3ஆவது இந்திய வம்சாவளி குதித்துள்ளார்.
அடுத்தாண்டு நவம்பர் 5ஆம் தேதி, அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்தாண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதை தொடர்ந்து, அடுத்த தேர்தலிலும் தான் போட்டியிட உள்ளதாக பைடன் அறிவித்துள்ளார்.
பைடனை தவிர்த்து, ராபர்ட் கென்னடி, மரியான் வில்லியம்சன் ஆகியோரும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் தேர்வில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். வேட்பாளர் தேர்வில் போட்டியிட்டு வென்ற பிறகே, கட்சியின் சார்பில் அமெரிக்காவில் தேர்தலில் நிற்க முடியும்.
குடியரசு கட்சியில் கடுமையாகும் போட்டி:
அதேபோல, முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் குடியரசு கட்சி சார்பில் அதிபருக்கான வேட்பாளர் தேர்வில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். இவர்களை தவிர, இந்திய வம்சாவளியான நிக்கி ஹேலி, விவேக் ராமசாமி ஆகியோரும் வேட்பாளர் தேர்வில் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
தற்போது, குடியரசு கட்சியின் வேட்பாளர் தேர்வில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மூன்றாவது நபர் இணைந்துள்ளார். வரவிருக்கும் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் போட்டியிட உள்ளதாக 38 வயதான ஹர்ஷ் வர்தன் சிங் அறிவித்துள்ளார்.
இந்திய-அமெரிக்க பொறியாளரான இவர், வெளியிட்ட மூன்று நிமிட வீடியோ மெசேஜில், தன்னை வாழ்நாள் குடியரசுக் கட்சிக்காரன் என்றும் அமெரிக்காவை முதன்மையாக கருதும் பழமைவாதி என்றும் குறிப்பிட்டுள்ளார். நியூ ஜெர்சி மாகாணத்தில் குடியரசுக் கட்சிக்குள் பழமைவாதப் பிரிவை மீட்டெடுப்பதில் தனது கடந்தகால முயற்சிகளை வீடியோ மெசேஜில் அவர் எடுத்துரைத்தார்.
ட்ரம்புக்கு எதிராக களமிறங்கும் 3வது இந்திய வம்சாவளி:
சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களைத் தலைகீழாக மாற்றவும், அடிப்படை அமெரிக்க விழுமியங்களை மீண்டும் நிலைநிறுத்தவும் வலுவான தலைமையின் எவ்வளவு அவசியம் என்பதை ஹர்ஷ் வர்தன் சிங் வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.
அரசியலில் பல சவால்களை கடந்து வந்திருக்கும் ஹர்ஷ் வர்தன் சிங், முன்னதாக, குடியரசு கட்சி சார்பாக பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட முயற்சி செய்துள்ளார். 2017 முதல் 2021 வரையிலான பதவி காலத்திற்கு நியூ ஜெர்சி ஆளுநராக போட்டியிட முயற்சி செய்துள்ளார்.
அதேபோல, 2018ஆம் ஆண்டு, குடியரசு கட்சி சார்பில் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலிலும் 2020ஆம் ஆண்டு செனட் சபைக்கான தேர்தலில் போட்டியிடவும் முயற்சி செய்துள்ளார். ஆனால், இந்த அனைத்து முயற்சிகளிலும் அவருக்கு தோல்வியே மிஞ்சியுள்ளது. ஆளுநர் பதவிக்கான சமீபத்திய போட்டியில் தன்னை ஒரு பழமைவாதியாக முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தார்.
முன்னாள் அதிபர் ட்ரம்புடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்ட போதிலும், அவரால் மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. அந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜாக் சியாட்டரெல்லி போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.