வெடிக்கவிருந்த கார்... ஹீரோ போல் இரண்டு குழந்தைகளை காப்பாற்றிய இளைஞர்..! நடந்தது என்ன?
கார் ஒன்று பற்றி எரிந்து கொண்டிருந்த நிலையில், அது வெடிப்பதற்கு ஒரு சில நொடிகளுக்கு முன்பாக அந்த இளைஞர் அதிலிருந்த குழந்தைகளை வெளியே தூக்கி சென்று காப்பாற்றியுள்ளார்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் இளைஞர் ஒருவர், ஹீரோ போல் செயல்பட்டு வெடிக்கவிருந்த காரில் இருந்து இரண்டு குழந்தைகளை காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. கார் ஒன்று பற்றி எரிந்து கொண்டிருந்த நிலையில், அது வெடிப்பதற்கு ஒரு சில நொடிகளுக்கு முன்பாக அந்த இளைஞர் அதிலிருந்த குழந்தைகளை வெளியே தூக்கி சென்று காப்பாற்றியுள்ளார்.
திக் திக் நிமிடங்கள்:
ஃபாக்ஸ் நியூஸ் வெளியிட்ட செய்தியின்படி, சாம் ஹெய்லரும் அவரது மனைவி மெலிசாவும் வார இறுதி விடுமுறைக்காக காரில் சென்று கொண்டிருந்தபோது அரிசோனாவில் உள்ள நவாஜோ கவுண்டியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிவதைக் கண்டனர். இதையடுத்து, தனக்கு முன்பிருந்த காரின் என்ஜின் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை பார்த்து தனது காரை அங்கேயே நிறுத்த முடிவு செய்துள்ளார்.
இந்த சம்பவத்தை விரிவாக எடுத்துரைத்த சாம் ஹெய்லர், "காரில் தீப்பிடித்ததை தொடர்ந்து, அதிலிருந்து பெற்றோர்கள் காரின் முன் இருக்கை கதவுகள் வழியாக வெளியேறினர். இதனால், பின்சீட் மூடி கொண்டது. அதில், இரண்டு பெண் குழந்தைகளும் மாட்டி கொண்டனர்.
பெற்றோர்கள் பதறிப்போய், கத்திக் கொண்டும், தங்கள் கைகளால் பின் ஜன்னல்களை தட்டியபடி இருந்தனர். என்ஜின் தடுப்பில் இருந்து வண்டிக்கு தீ பரவுவதற்கு சில வினாடிகளே இருந்தன. குழந்தைகள் கத்துகிறார்கள். பெற்றோர்கள் கத்துகிறார்கள். என் மனைவியும் கத்தினார்.
ஹீரோ போல் செயல்பட்ட இளைஞர்:
சூழ்நிலை மோசமாக இருந்தது. எரிபொருள் தொட்டியில் தீ ஏற்பட்டபோது அது வெடிப்பை ஏற்படுத்தியது. குழந்தைகளை காப்பாற்றுவதற்காக செய்வதறியாமல் தவித்து வந்த தந்தை பீதியில் பின் ஜன்னல்கள் மீது கற்களை வீச முயன்றார். பின் ஜன்னலுக்கு பின்தான், குழந்தைகள் அமர்ந்திருந்தனர்.
இதற்கிடையே, தீ காரின் முன் பக்கத்தில் முழுவதுமாகப் பரவியது. உள்ளே மாட்டி கொண்ட குழந்தைகள் அலறி கொண்டே இருந்தனர். இறுதியாக, கற்களை கொண்டு ஜன்னலை உடைத்து கதவுகள் உள்ளே இருந்து பச்சிளம் குழந்தைகளை பத்திரமாக மீட்டேன். கதவுகளை திறந்தவுடன் குழந்தைகளின் சீட்பெல்ட்டை கழட்டினேன். தாய், தந்தை உதவியுடன் குழந்தைகளை வெளியெ எடுத்தேன்.
அந்த பகுதியில் செல்போன் சேவையே இல்லை. ஆனால், ஒளிரும் குச்சியை பயன்படுத்தி அந்த வழியாக சென்ற காரை தடுத்தி நிறுத்தினேன். பின்னர், அவர் மூலம் அவசர எண்ணை அழைத்தேன். அதற்கு, செல்போன் சேவை கிடைத்துவிட்டது. இதையடுத்து, காவல்துறையை அழைத்தேன். தகவல் அறிந்து காவல்துறையும் சம்பவ இடத்திற்கு வந்தது" என்றார்.
தன்னுடைய கணவர் குழந்தைகளை காப்பாற்றியது குறித்து பேசிய மெலிசா, "ஆரம்பத்தில், சாலை ஓரத்தில் ஒரு கார் நிற்பதை பார்த்து எங்கள் காரை நிறுத்த வேண்டாம் என்றுதான் என கணவர் நினைத்தார். ஆனால், பின்னர், ஏதோ ஒன்று அவரைத் தாக்கியது. அப்போதுதான், அவர் உதவ முடியுமா என யோசித்தார்" என்றார்.