Crude Oil Import Vs US: “ரஷ்யா கிட்ட கச்சா எண்ணெய் வாங்குறவங்களுக்கு வரி போடுங்க“ - ஜி7 நாடுகளை தூண்டிவிடும் அமெரிக்கா
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு நீங்களும் வரியை போடுங்கள் என்று, ஜி7 நாடுகளை அமெரிக்கா தூண்டி விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு ஏற்கனவே அபாராத வரி என்று எக்கச்சக்கமான வரியை ட்ரம்ப் விதித்துள்ளார். அது போதாது என்று, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு வரி விதியுங்கள் என்று ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்கா தூண்டி விட்டது. இந்த சூழலில், தற்போது ஜி7 நாடுகளையும் விட்ட வைக்காமல், ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகளுக்கு வரி விதிக்குமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜி7 நாடுகள்
உலக அளவில், பொருளாதாரம், வர்த்தகம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட முக்கியமான பிரச்னைகளை விவாதித்து, அதற்கான தீர்வுகளை காண்பதற்காக, வளர்ச்சி அடைந்த நாடுகள் உருவாக்கிய அமைப்பு தான் ஜி7 கூட்டமைப்பு.
இந்த ஜி7 கூட்டமைப்பில், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த 7 நாடுகளும், ஆண்டுதோறும் கூடிப் பேசி, உலகளாவிய பிரச்னைகள் குறித்து முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றன.
ஜி7 கூட்டமைப்பு நாடுகளுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
இந்த நிலையில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில், குறிப்பாக இந்தியாவை குறி வைத்து வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஏற்கனவே அறிவித்த வரியுடன், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவிற்கு அபராதமாக 25 சதவீதம் கூடுதலாக வரி விதித்தார். இதனால், இந்தியாவிற்கான மொத்த வரி 50 சதவீதமானது.
ஆனாலும் அதற்காக அசராத இந்தியா, தனக்கு மிகவும் நெருக்கமான நட்பு நாடான ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. அதோடு, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது நிறுத்தப்படாது என்றும் திட்டவட்டமாக அமெரிக்காவிடம் தெரிவித்துவிட்டது.
இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப், ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளிடம், இந்தியா மீதும், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் பிற நாடுகள் மீது வரிகளை விதிக்குமாறு கேட்டது.
இந்நிலையில், தற்போது ஜி7 நாடுகளிடமும் அதேபோல், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு வரி விதிக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வரிகளை விதிப்பதில், அமெரிக்கா உடன் ஜி7 நாடுகள் இணைய வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து, அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் மற்றும் வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் ஆகியோர், ஜி7 நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் தொலைபேசியில் உரையாடியதோடு, அது குறித்த கூட்டறிக்கையையும் வெளியிட்டுள்ளனர்.
கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன.?
அந்த கூட்டறிக்கையில், உக்ரைனுக்கு எதிரான புதினின் போர் நடவடிக்கைகளுக்கு நிதி அளிக்கும் வருவாயை, (கச்சா எண்ணெய் வாங்குவது) ஒருங்கிணைந்த முயற்சியால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அதற்கு போதுமான பொருளாதார அழுத்தத்தை தர வேண்டும் என்வும், அதனால், சீனா மற்றும் இந்திய பொருட்களுக்கு வரி விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதிபர் ட்ரம்ப்பின் துணிச்சலான தலைமைக்கு நன்றி என தெரிவித்துள்ள அவர்கள், ரஷ்யா மற்றும் அதன் எண்ணெய் வாங்கம் நாடுகள் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நெருக்கடியான நேரங்களில் தீர்க்கமான நடவடிக்கை எடுப்பதில் ஜி7 நாடுகள் தங்களுடன் இணைவார்கள் என்று நம்புவதாகவும், அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















