H-1B Visa Restrictions: ட்ரம்ப் சார்.. ஏற்கனவே Fees ஏத்துனது போதாதா.?; H-1B விசா-மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க திட்டம்
ஏற்கனவே H-1B விசாவிற்கான கட்டணத்தை ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களாக உயர்த்திவிட்ட நிலையில், மேலும் பல கட்டுப்பாடுகளை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றிவரும் நிலையில், H-1B விசாவிற்கான கட்டணத்தை ஒரு லட்சம் அமெரிக்க டாலராக உயர்த்தி சமீபத்தல் அறிவிப்பு வெளியிட்டார். இதனால், பல நிறுவனங்களும், பணியாளர்களும் பெரும் அதிர்ச்சியடைந்த நிலையில், தற்போது மேலும் ஒரு அதிர்ச்சியை அரங்கேற்ற ட்ரம்ப் நிர்வாகம் தயாராகி வருகிறது. ஆம், H-1B விசாவிற்கு மேலும் பல புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
H-1B விசா - புதிய கட்டுப்பாடுகள்
H-1B விசா திட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில், அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் 1,00,000 அமெரிக்க டாலர்கள் கட்டாயக் கட்டணம் விதித்த அதிர்ச்சியை கொடுத்த நிலையில், நிறுவன முதலாளிகள் இந்த விசா அனுமதியை எவ்வாறு பயன்படுத்தலாம், யார் அதற்குத் தகுதி பெறுகிறார்கள் என்பதில் கூடுதல் குடியேற்றக் கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளது.
H-1B விசா வகையை மாற்றியமைக்க, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதன் ஒழுங்குமுறை நிகழ்ச்சி நிரலில் ஒரு விதி மாற்றத்தை முன்மொழிந்துள்ளது. 'H-1B குடியேற்றமற்ற விசா வகைப்பாடு திட்டத்தை சீர்திருத்துதல்' என்ற தலைப்பின் கீழ், கூட்டாட்சி பதிவேட்டில் முறையாக பட்டியலிடப்பட்டுள்ள இந்த திட்டங்கள், "உச்ச விலக்குகளுக்கான தகுதியை திருத்துதல், திட்டத் தேவைகளை மீறிய முதலாளிகளுக்கு அதிக ஆய்வு வழங்குதல் மற்றும் மூன்றாம் தரப்பு வேலை வாய்ப்புகள் மீதான மேற்பார்வையை அதிகரித்தல்" போன்ற பல தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கியது.
வருடாந்திர உச்சவரம்பிலிருந்து எந்த முதலாளிகள் மற்றும் பதவிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்பதை DHS குறைக்க திட்டமிட்டுள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், ட்ரம்ப் நிர்வாகம் விலக்கு உச்சவரம்பை மாற்றினால், இந்த நடவடிக்கை தற்போது விலக்குகளால் பயனடையும் லாப நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் சுகாதார நிறுவனங்களை பாதிக்கக்கூடும் என்று செய்தி வெளியாகியுள்ளது.
புதிய கட்டுப்பாடுகளால் யாருக்கு பாதிப்பு.?
"இந்த மாற்றங்கள் H-1B குடியேற்றமற்ற திட்டத்தின் ஒருமைப்பாட்டை மேம்படுத்தவும், அமெரிக்க தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் பணி நிலைமைகளை சிறப்பாக பாதுகாக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளன" என்று அந்தத் திட்டம் கூறுகிறது. இந்த மாற்றங்கள், அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரம்பரிய H-1B விசா லாட்டரியை ஊதிய அடிப்படையிலான தேர்வு முறையுடன் மாற்றுவது குறித்து டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக முந்தைய தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில், ஒழுங்குமுறை அறிவிப்பின்படி, டிசம்பர் 2025-ல் இந்த புதிய விதிகளுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.





















