Afghanistan School Reopen: ‛நீ அந்த பக்கம்... நான் இந்த பக்கம்...’ பிரிக்கப்பட்ட மாணவ மாணவிகள்: வேறு எங்கு... ஆப்கானில் தான்!
ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழக வகுப்பறைகளுக்குள் மாணவர்கள் மற்றும் மாணவிகளிடையே திரைச்சீலை அமைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழக வகுப்பறைகளுக்குள் மாணவர்கள் மற்றும் மாணவிகளிடையே திரைச்சீலை அமைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்கிருந்த கடைசி அமெரிக்க ராணுவ வீரரும் வெளியேறிவிட்டார். இந்நிலையில் ஆட்சி அமைக்க தாலிபான்கள் முனைப்புக் காட்டி வருகிறார்கள். புதிய ஆட்சி அமைப்பது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அங்குள்ள பல்கலைகழகங்கள் மீண்டும் வழக்கம்போல இயங்க துவங்கியுள்ளன. ஆப்கானிஸ்தான் முழுவதும் உள்ள மாணவர்கள் பல்கலைக்கழக வகுப்பறைகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். முன்னதாக, தாலிபான்களின் கடந்த 1996 முதல் 2001 வரையிலான ஆட்சிகாலத்தின்போது பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து தற்போது தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள சூழலில் மீண்டும் அதுபோன்ற விதிமுறைகள் விதிக்கப்படுமோ என மாணவிகள் அச்சம் தெரிவித்திருந்தனர். ஆனால் ஷரியத் விதிகளுக்கு உட்பட்டு பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும், கல்வி கற்கவோ வேலைக்கு செல்லவோ பெண்களுக்கு அனுமதி உண்டு ஆனால் ஆட்சி அதிகாரத்தில் பெண்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தாலிபான்கள் தெரிவித்தனர்.
தற்போது பல்கலைகழகங்கள் இயங்கத்துவங்கியுள்ள சூழலில், மாணவர்கள் மற்றும் மாணவிகள் தனித்தனியாக அமரவைக்கப்பட்டு இடையில் சாம்பல் நிற திரைச்சீலை அமைக்கப்பட்டுள்ளது
ஆப்கானின் பெரிய நகரங்களான காபூல், காந்தஹார், ஹெராட் ஆகியவற்றை சார்ந்த மாணவர்கள் பேசுகையில் தாங்கள் தனித்தனியே பிரித்து அமர வைக்கப்பட்டதாக தெரிவித்தனர். மேலும் கல்லூரி வளாகங்களில் சில பகுதிகளுக்கு மாணவிகளுக்கு அனுமதி இல்லை என்றும் குறிப்பிட்டனர். ஒரே வகுப்பறையில் இருபாலருக்கும் அனுமதி இல்லை எனும் அறிவிப்பைத் தொடர்ந்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காபூலில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் 37 வயதான ஷேர் ஆஸம் என்ற ஆசிரியர், பேசுகையில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் தனித்தனியாக அமரவைக்கப்பட வேண்டும் மற்றும் அவர்களிடையே திரைச்சீலை அல்லது பலகைகள் அமைக்கப்பட வேண்டுமென தங்களது நிறுவனம் சார்பில் அறிவுறுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.
அதேபோல தற்போதுள்ள பதற்றமான மற்றும் குழுப்பமான சூழலில் எத்தனை மாணவர்களால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு திரும்ப முடியும் என தெரியவில்லை என்றும் கவலை தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக நிறைய பேர் வேலை இழந்திருக்கிறார்கள் என்றும் அந்த குடும்பங்களிலிருந்து எத்தனை மாணவர்கள் கல்வி பயில வருவார்கள் என்பது அடுத்தடுத்த நாட்களில்தான் தெரியும் என்றும் தெரிவித்தார்.
ஒரு சில மாணவர்களே தற்போது வருகை தரும் சூழலில் மாணவர்கள் மற்றும் மாணவிகளிடையே தனித்தனி வகுப்புகள் அமைப்பது இயலாத காரியம் என்றும் தேவைக்கு ஏற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவு என்றும் பட்டியலிட்டார்.
இந்நிலையில் க வகுப்பறைகளுக்குள் மாணவர்கள் மற்றும் மாணவிகளிடையே திரைச்சீலை அமைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.