Afghan Women : ’புதைக்கப்படும் டிகிரி சான்றிதழ்கள், ஐ.டி.கார்டுகள்!’ - ஆஃப்கான் பெண்களுக்கு நிகழ்வது என்ன?
புர்கா அணியாத பெண்களை தங்களது வாகனத்தில் ஏற்ற மறுத்துள்ளன பொதுப்போக்குவரத்து வாகனங்கள். ஒருவேளை அவர்களை வண்டியில் ஏற்றினால் தலிபான்கள் தங்களைத் தாக்கக்கூடும் என்கிற அச்சம் அவர்களுக்கு.
ஆஃப்கான் தலைநகர் காபுலை தலிபான்கள் சூழ்ந்தது பற்றி நேரலையில் பதிவு செய்கிறார் சி.என்.என்., நிறுவனத்தின் செய்தியாளர் க்ளாரிஸா வார்ட். அதே க்ளாரிஸா இரண்டு நாட்களுக்குப் பிறகான செய்தி நேரலையில் ஆப்கானிலிருந்து தப்பியோட முயற்சிப்பவர்கள் மீது நடைபெறும் துப்பாக்கித் தாக்குதல்கள் குறித்து பதிவு செய்கிறார். இந்த இரண்டு காட்சிகளும் சர்வதேசத் தளங்களில் வைரலானது. காரணம், இரண்டாவது காட்சியில் க்ளாரிஸா புர்கா அணிந்திருந்தார். தலிபான்கள் ஆட்சியில் பெண்கள் புர்கா இல்லாமல் வெளியே வரக்கூடாது.
'அவர்கள் நகரத்துக்குள் நுழைந்துவிட்டார்கள். நாங்கள் தப்பி ஓடிக்கொண்டிருக்கிறோம். எல்லோரும் அச்சத்தில் இருக்கிறோம்’ என காபூல் வீதிகளில் மூச்சிரைக்க ஓடியபடியே தனது ஃபோன் வீடியோவில் பேசுகிறார் ஆஃப்கான் சினிமா இயக்குநர் சஹ்ரா கரிமி. பாகிஸ்தான் திரைத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஒரே பெண். தலிபான்கள் சினிமாவுக்குத் தடைவிதித்திருந்தனர். குறிப்பாக பெண்கள் சினிமாவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம். சஹ்ரா ஆஃப்கானிலிருந்து வெளியேறிவிட்டார் எனச் சொல்லப்பட்ட நிலையில், ‘நான் ஆஃப்கான் திரைத்துறையிலிருந்து அவர்களாக என்னை நீக்கும்வரை விலகப்போவதில்லை, ஆஃப்கானிலிருந்தும் வெளியேறப்போவதில்லை’ என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Taliban surrounded Kabul, I were to bank to get some money, they closed and evacuated;
— Sahraa Karimi/ صحرا كريمي (@sahraakarimi) August 15, 2021
I still cannot believe this happened, who did happen.
Please pray for us, I am calling again:
Hey ppl of the this big world, please do not be silent , they are coming to kill us. pic.twitter.com/wIytLL3ZNu
‘இந்தச் சிறுமிகளைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. நான் தற்போது மிகுந்த மனவேதனையில் உள்ளேன். நான் எவ்வளவோ முயற்சித்தும் எம் பெண்களை இந்த துன்பமிக்க சூழலில் இருந்து வெளியேற்ற முடியவில்லை’ எனக் கண்கள் கலங்குகிறார் நஸ்ரின் சுல்தானி, காபுலின் சர்தார்-இ-காபுலி பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் தாளாளர். ஆப்கானில் அமெரிக்கா அமைதி நடவடிக்கைகளைத் தொடங்கிய பிறகு கடந்த பத்து வருடங்களாக அங்கே பெண்களுக்கான கல்வியில் இவர் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார். தலிபான்கள் ஆட்சியில் பெண்கள் படிப்பது, கல்வியறிவு பெறுவது கசையடிக் குற்றம். நஸ்ரின் சுல்தானி இதனால் இறக்கக் கூட வாய்ப்புள்ளது.
'எங்கள் வீட்டுக்கு நாங்கள் சென்றதும் நானும் எனது தங்கையும் செய்த முதல் வேலை, எங்களது யுனிவர்சிட்டி ஐ.டி.கார்டுகள், டிப்ளமோக்கள், சான்றிதழ்கள் என அத்தனையும் ஒளித்து வைத்ததுதான்’ என்கிறார் இரண்டு இளங்கலைப் பட்டத்துக்குப் படித்துக்கொண்டிருக்கும் ஆஃப்கான் பெண் ஒருவர். கடந்த ஞாயிறன்று பல்கலைக்கழகம் சென்றவர் அங்கிருந்து எல்லோரும் தலைதெறிக்க வெளியேறுவதைக் கண்டு வீடு திரும்ப முயற்சித்து இருக்கிறார். ஆனால் புர்கா அணியாத பெண்களை தங்களது வாகனத்தில் ஏற்ற மறுத்துள்ளன பொதுப் போக்குவரத்து வாகனங்கள். ஒருவேளை அவர்களை வண்டியில் ஏற்றினால் தலிபான்கள் தங்களைத் தாக்கக் கூடும் என்கிற அச்சம் அவர்களுக்கு. சாலையில் இருந்த மற்ற ஆண்கள், ‘போ! போய் உனது சதாரியை(புர்கா) மாட்டிக்கொள். நீ தெருக்களில் இருக்கும் கடைசி நாட்கள் இதுவாகத்தான் இருக்கும்’ என அவரைப் பார்த்துப் பரிகசிக்கிறார்கள்.
ஆஃப்கானிலிருந்து வெளியேறுவது தொடர்பான அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்குமிடையே தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கிய அதே சமயம் தலிபான்களுக்கும் ஆஃப்கான் அரசுக்கும் இடையிலான அதிகாரப்பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தையும் 10 மார்ச் அன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பிப்ரவரி 29-இல் தொடங்கிய இந்த அமெரிக்க தலிபான் பேச்சுவார்த்தையில் பெண்கள் உரிமை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அமெரிக்காவின் பேச்சுவார்த்தையை முந்நகர்த்திச் சென்ற சல்மே காலிசாத் அது எல்லாம் உள்நாட்டு விவகாரம் அதை ஆஃப்கான் அரசும் தலிபான்களும்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும் எனக் கைவிரித்தார். சர்வதேசத் தீவிரவாதத்துக்கு தலிபான் பொருளாதார ரீதியாக உதவுவதைத் தடுப்பது மட்டுமே அமெரிக்க தரப்பின் குறிக்கோளாக இருந்ததால் பெண்கள் பாதுகாப்பு அந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு பொருட்டாக இருக்கவில்லை.
ஆஃப்கான் ராணுவத்தில் பெண்களுக்கு அனுமதியே இல்லை என்னும் நிலையில், தற்போது தலிபான் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் சூழலில் தான் தலிபான்களால் ஒருவேளை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்படலாம் என்பதைக் கவலையுடன் பகிர்கிறார் ஆஃப்கான் ராணுவத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்.
இருந்தும் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான தலிபான் அறிக்கையில், ‘அப்கானில் உள்ள அனைவருக்கும் சம உரிமை கிடைக்கு வகையிலான ஒரு இஸ்லாமியக் கட்டமைப்பை நாம் உருவாக்குவோம். அதில் கல்வி மற்றும் வேலைக்குச் செல்வது உள்ளிட்ட பெண்களுக்கான உரிமைகளும் வழங்கப்படும். அவர்கள் உரிமையும் பாதுகாக்கப்படும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. பெண்களுக்கான உரிமை எனக் குறிப்பிடப்பட்டிருந்ததே ஒழிய அது சம உரிமையில் இடம்பெறவில்லை. 1996 முதல் 2001 வரை அங்கே ஆட்சியில் இருந்த தலிபான்களைப் பொறுத்தவரை, இஸ்லாம் அனுமதித்த அத்தனைச் சுதந்திரங்களையும் அங்கே பெண்கள் பெற்றிருந்தார்கள். 1996 முதல் 2001 வரையிலான காலக்கட்டத்தில் தலிபான்களைப் பொறுத்தவரை அங்கே பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, இயக்கம், சுகாதாரம் உள்ளிட்டவை முற்றிலுமாக மறுக்கப்பட்டிருந்தன. இந்த விதிகலை மீறுபவர்கள் பொதுவெளியில் கசயடிக்கு உட்படுத்தப்பட்டார்கள் அல்லது கல்லடிக்கு ஆளானார்கள். காலப்போக்கில் பெண்களை ஆரம்பப்பள்ளி வரை தலிபான்கள் அனுமதித்தாலும் அங்கே சிறுமிகள் பெண்கள் மீதான தலிபான்களின் வன்முறைத் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன.
அமெரிக்க காங்கிரஸுடன் ஒப்பிடுகையில் இன்றைய தேதியில் ஆஃப்கான் நாடாளுமன்றத்தில் அதிகமான பெண்களின் பங்களிப்பு இருந்தாலும் பெண்கள் உரிமை விவகாரத்தில் ஹமீத் கர்சாய் அரசோ அல்லது அஷ்ரஃப் கனி அரசோ நம்பத் தகுந்ததாக இருந்ததில்லை. அமைதிப் பேச்சுவார்த்தையில் பெண்களின் பங்களிப்பு என்பதே இல்லை. மேலும் திருமணத்துக்குட்பட்ட பாலியல் வன்முறைகளை ஆதரித்து 2009லேயே அங்கே சட்டம் இயற்றியிருந்தது ஹமீத் கர்சாய் அரசு. அங்கே திருமண உறவில் நிகழும் பாலியல் வன்முறை அடிப்படையில் பெண்கள் விவாகரத்து அளிப்பது மறுக்கப்பட்டிருந்தது.
ஆஃப்கானில் இதுவரையிலான ஆட்சி மாற்றங்களின் கருவாக பெண்கள் உரிமை இருந்திருக்கிறது. அங்கே பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு தலிபான்கள் மட்டுமே காரணம் அல்ல. அந்த நாட்டின் பல்வேறு பழங்குடிப் பிரிவுகளின் விதிகளில் ஒன்றாக பெண்கள் மீதான ஒடுக்குமுறை இன்றளவும் நடைமுறையில் உள்ளது. அந்தப் பழங்குடிகளின் அதிகாரப் பகிர்வுக்கான ஒரு பொருளாக மட்டுமே அங்கே பெண்கள் பார்க்கப்பட்டு வருகிறார்கள். பழங்குடிகள் தங்களது அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள முடிவெடுத்தால் தங்கள் குடியின் பெண்களைப் பண்டமாற்றம் எனப் பகிர்ந்துகொள்வார்கள்.
1880 முதல் 1901 வரையிலான காலக்கட்டத்தில் அங்கே அப்துர் ரஹீம் கான் என்பவரது ஆட்சியில்தான் புதிய ஆஃப்கான் உருவானது. ஆணுக்குப் பெண் அடிமை என்பதில் அவருக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றாலும் பெண்களை ஒடுக்கும் சில சட்ட விதிகளை அவர் திருத்தினார். உதாரணத்துக்கு, இறந்த தனது கணவனின் சகோதரரை பெண் கட்டாயமாக மணக்க வேண்டும் என்கிற விதியை நீக்கினார். பெண்களுக்கான திருமண வயது அதிகரிக்கப்பட்டது. குறிப்பிட்ட சூழலில் பெண்கள் விவாகரத்து கோர அனுமதி அளிக்கப்பட்டது. இஸ்லாமிய சட்டதிட்டத்துக்கு உட்பட்டு தனது தந்தை அல்லது கணவரின் சொத்தில் உரிமை கோர பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இருந்தும் 2001-ஆம் ஆண்டுக்குப் பிறகான இந்த 20 வருட காலக்கட்டத்தில்தான் பெண்கள் அங்கே விடுதலையுடனும் அதிகார உரிமையுடனும் வாழ முடிந்தது. தற்போது தலிபான்கள் மீண்டும் காபூலைக் கைப்பற்றியிருப்பது 20 வருடங்கள் நாட்டைப் பின்னோக்கி நகர்த்தும் என்பது மறுப்பதற்கில்லை.