Bird Flu: ஜப்பானில் தீவிரமாகும் பறவை காய்ச்சல்; 15 மில்லியன் கோழிகள் பாதிப்பு - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
ஜப்பானின் அமோரி மாகாணத்தில் பறவைக் காய்ச்சலின் பரவல் காரணமாக சுமார் 3,30,000 கோழிகள் அழிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் அமோரி மாகாணத்தில் பறவைக் காய்ச்சலின் பரவல் காரணமாக சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் கோழிகள் அழிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் பறவைக்காய்ச்சல்:
ஜப்பானில் மார்ச் மாதம் 23ஆம் தேதி கோழி பண்ணையில் பறவைகள் இறந்ததை அடுத்து அங்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதை சோதனை செய்ய 13 கோழிகளுக்கு பறவை காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 13 கோழிகளில் 11 கோழிக்கு பறவை காய்ச்சல் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. பறவை காய்ச்சலின் தொற்று காரணமாக அந்த பண்ணையில் இருக்கும் சுமார் 3,30,000 கோழிகள் அழிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கோழி பண்ணையில் இருந்து சுமார் 3 கிமீ சுற்றளவு வரை கோழிகள் அல்லது முட்டைகள் கொண்டு செல்ல அதிகாரிகள் தரப்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பண்ணை மற்றும் பண்ணை சுற்றியுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமோரி மாகாணத்தில் இந்த பருவத்தில் பறவைக் காய்ச்சல் பரவுவது இது மூன்றாவது முறையாகும்.
15 மில்லியன் கோழிகள்:
இந்த பருவத்தில் ஏற்பட்ட பறவை காய்ச்சல் பாதிப்புகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் இதுவரை 15 மில்லியன் கோழிகள் பாதிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவு மிக அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் தற்போது வரை சுமார் 47 இடங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பணவீக்கம் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு மத்தியில் பறவை காய்ச்சல் காரணமாக முட்டை மற்றும் கோழியில் விலை உயர்ந்துள்ளது. கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத அளவு இது உயர்ந்துள்ளது என கூறுகின்றனர். பறவைக் காய்ச்சல் என்பது மிகவும் எளிதில் பரவக்கூடிய வைரஸ். இந்த வைரஸ் பறவைகளுக்கு இன்ஃப்ளூயன்சா காய்ச்சலை ஏற்படுத்தும். இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பறவைகள் இறந்து போகின்றன.
வரலாறு காணாத பாதிப்பு:
2020 ஆம் ஆண்டு இலையுதிர் காலம் தொடங்கி 2021 ஆம் ஆண்டு வசந்த காலம் வரை ஜப்பானில் வரலாற்றில் இல்லாத அளவு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. 50க்கும் மேற்பட்ட பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 10 மில்லியன் கோழிகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. தற்போது மீண்டும் இந்த பறவை காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. இந்த பருவ காலத்தில் இதுவரை சுமார் 15 மில்லியன் கோழிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டிராத அதிக பாதிப்பு இது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
சமீபத்தில் கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. அப்போது ஆயிரங்கணக்கான கோழி மற்றும் வாத்துகள் அழிக்கப்பட்டது. மேலும் கேரளாவிலிருந்து கோழி அல்லது வாத்தை தமிழகத்திற்கு கொண்டு வர தடை விதிக்கப்பட்டது.