இரண்டு கருப்பைகள்.. இரண்டிலும் கருவுற்ற அமெரிக்கப் பெண்.. பேசுபொருளான குழந்தை..
இரண்டு கருப்பைகளுடன் பிறந்த அமெரிக்கப் பெண்ணுக்கு இரண்டு கருப்பையிலும் கரு உருவாகியிருப்பதோடு, மருத்துவர்கள் இதுவரை பார்த்ததிலேயே மிகச் சிறிய குழந்தையையும் ஈன்றுள்ளார்.
இரண்டு கருப்பைகளுடன் பிறந்த அமெரிக்கப் பெண்ணுக்கு இரண்டு கருப்பையிலும் கரு உருவாகியிருப்பதை அறிந்திருப்பதோடு, மருத்துவர்கள் இதுவரை பார்த்ததிலேயே மிகச் சிறிய குழந்தையையும் ஈன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மேகன் ஃபிப்ஸ் என்ற 24 வயது பெண் பிறக்கும் போதே இரண்டு கருப்பைகள் கொண்ட அபூர்வ நிலையுடன் பிறந்தவர். Uterine didelphys என்ற இந்த அபூர்வ நிலை கொண்ட பெண்களுக்கு இரண்டு கருப்பைகளும், இரண்டு கருப்பை வாய்களும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த அபூர்வ நிலையின் காரணமாக மேகன் ஃபிலிப்ஸுக்கு வெவ்வேறு நாள்களில் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. எனினும் அவற்றுள் ஒரு குழந்தை மட்டுமே உயிர் பிழைத்துள்ளது.
ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்குத் தாயான மேகன் ஃபிப்ஸ் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், `முதலில் பிறந்த இரண்டு குழந்தைகளும் எனது வலப்பக்க கருப்பையில் உருவாகி வளர்ந்தவை. எனவே என்னுடைய இடப்பக்க கருப்பை செயல்படாது என்றே நான் எண்ணி வந்தேன்’ எனக் கூறியுள்ளார்.
எனினும், இந்த முறை, மேகன் ஃபிப்ஸ் தனது வலப்பக்க கருப்பையிலும், இடப்பக்க கருப்பையிலும் ஒரே நேரத்தில் கருவுற்றிருப்பதை மருத்துவர்கள் மூலம் தெரிந்துகொண்டார்.
அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்திலுள்ள லிங்கன் நகர மருத்துவமனையில், வெறும் 22 வாரங்களில் பிரசவ வலியின் காரணமாக அனுமதிக்கப்பட்டார் மேகன் ஃபிப்ஸ். தனது குழந்தைகள் உயிருடன் பிழைப்பதற்கு வெறும் 1 சதவிகிதம் வாய்ப்பு மட்டுமே இருப்பதாக அவருக்குக் கூறப்பட்டுள்ளது.
`தங்கள் தாய் கருவுற்றிருந்த சூழல் புதியது என்பதால் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு மிகக் குறைவாக இருந்தது’ என மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த ஜூன் 11 அன்று, மேகனுக்கு ரைலி என்ற பெண் குழந்தையும், அடுத்த நாளான ஜூன் 12 அன்று, ரீஸ் என்ற மற்றொரு பெண் குழந்தையும் பிறந்தன. இரண்டு குழந்தைகளுமே சுமார் 1 கிலோவுக்கும் குறைவான எடையையே கொண்டிருந்தன. எனினும் துரதிருஷ்டவசமாக பிறந்த 12 நாள்களிலேயே, ரைலி என்ற பெண் குழந்தை உயிரிழந்தது.
கொரோனா காலத் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, யாரும் மேகனைப் பார்க்க அனுமதிக்கப்படாததால், அவருக்கு ஆறுதல் அளிக்கும் பொறுப்பை மருத்துவர்களும், செவிலியர்களும் ஏற்றுக் கொண்டனர். `மருத்துவமனையில் எனக்கு இருந்த ஒரு குடும்பம் மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள் ஆகியோர். அவர்களே என் குழந்தையைக் கவனமாகப் பார்த்துக் கொண்டனர்’ என்று இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் மேகன் ஃபிப்ஸ்.
உயிர் பிழைத்த மற்றொரு குழந்தையான ரீஸ் சுமார் 144 நாள்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்துள்ளது. கடந்த நவம்பர் 2 அன்று, சுமார் 4 கிலோ எடையுடன் நன்கு தேர்ச்சியடைந்து, தன் தாயுடன் வீட்டுக்குத் திரும்பியுள்ளது குழந்தை ரீஸ்.