உணவைத் தேடி அலையும் அப்பாவி மக்கள்...குறிவைத்து கொல்லும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள்...சிரியாவில் தொடரும் அட்டூழியம்..!
உணவு தட்டுப்பாட்டின் காரணமாக ட்ரஃபுல் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. எனவே, பணத்திற்காக ட்ரஃபுலை மக்கள் சேகரித்து வருகின்றனர்.
கடந்த 2011ஆம் ஆண்டு முதல், சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ஒரு கட்டத்தில் அரசு மற்றும் அரசு எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களுக்கு இடையே நடக்கும் போராக மாறியது. ஒரு புறம் சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷியாவும் ஈரானும் செயல்பட்டு வருகின்றன.
சிரியா போர்:
மறுபுறம், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா, சவுதி அரேபியா, துருக்கி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போர், அந்நாட்டின் பொருளாதாரம் நிலைகுலைய காரணமாக அமைந்தது. இதன் காரணமாக, அங்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த உணவு தட்டுப்பாட்டின் காரணமாக ட்ரஃபுல் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. எனவே, பணத்திற்காக ட்ரஃபுலை மக்கள் சேகரித்து வருகின்றனர். ஆனால், ட்ரஃபுலை தேடி அலையும் மக்களை குறிவைத்து ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, நேற்று ட்ரஃபுலை தேடி அலைந்த 31 பேரை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர். இதை தவிர்த்து, கால்நடைகளை மேய்க்கும் 4 பேரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர். இரண்டு பேர் கடத்தப்பட்டுள்ளனர்.
ட்ரஃபுலை தேடி அலையும் மக்கள்:
இதுகுறித்து மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட தகவலில், "ஹமாவின் கிழக்கே பாலைவனத்தில் ட்ரஃபுலை சேகரிக்க சென்ற அரசுக்கு ஆதரவான 12 போராளிகள் உட்பட மொத்தம் 31 பேர் கொல்லப்பட்டனர்" என குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் குறைந்தது 26 பேர் இறந்ததாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்த தகவலை அதிகாரப்பூர்வ சிரிய செய்தி நிறுவனமான சானாவால் உறுதிப்படுத்தியது.
ட்ரஃபுலை தேடி செல்ல வேண்டாம் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில், பட்டினியால் வாடும் நூற்றுக்கணக்கான சிரியர்கள் சிரிய பாலைவனத்தில் ட்ரஃபுலை தேடி செல்கிறார்கள்.
பிப்ரவரி மாதம் முதல், 230க்கும் மேற்பட்ட மக்கள் - அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் - ட்ரஃபுலை தேடி சென்று ஐஎஸ் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தனர். அல்லது பயங்கரவாதிகள் விட்டுச்சென்ற கண்ணிவெடிகளால் கொல்லப்பட்டனர். கடந்த மாதம், ட்ரஃபுலை தேடிச் சென்ற 15 பேர் ஐஎஸ் தீவிரவாதிகளால் கழுத்து அறுக்கப்பட்ட கொல்லப்பட்டனர்.
பிப்ரவரியில், மோட்டார் சைக்கிள்களில் சென்ற ஐஎஸ் போராளிகள் ட்ரஃபுலை தேடி சென்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 68 பேர் கொல்லப்பட்டனர். சிரிய பாலைவனம் உலகின் தரமான ட்ரஃபுலை உற்பத்தி செய்வதில் புகழ் பெற்றது.
இந்த விலையுயர்ந்த ட்ரஃபுல் தரத்தைப் பொறுத்து ஒரு கிலோவிற்கு 25 அமெரிக்க டாலர்கள் (2.2 பவுண்டுகள்) வரை விற்கப்படுகிறது. சிரியாவில் ஒருவரின் சராசரி மாத ஊதியம் சுமார் 18 அமெரிக்க டாலர்கள் ஆகும்.