மலேசியா: படகு கவிழ்ந்து விபத்து - 11 புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழப்பு; 25 பேர் மாயம்
மலேசியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேரை தேடும் பணி நடைபெற்று வருகின்றது.
மலேசியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேரை தேடும் பணி நடைபெற்று வருகின்றது.
மலேசியாவின் தெற்குப் பகுதியில் படகு ஒன்று மூழ்கியதில் 11 இந்தோனேசிய அகதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலை தேடும் இந்தோனேசியர்கள் சில சமயங்களில் அண்டை நாடான மலேசியாவிற்கு சட்டவிரோதமாக கடல் வழியாக பயணம் செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
மலேசியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஜோகர் மாகாணத்தில் அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று கடலில் சென்று கொண்டிருந்தது. அந்த படகில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 60 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் படகு திடீரென நீரில் கவிழ்ந்துள்ளது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த மலேசிய கடலோர காவல் படையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் மீட்பு படகுகளை கொண்டு தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் சடலங்களை கடலோர காவல்படையினர் மீட்டனர். மேலும் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 24 பேரையும் வீரர்கள் பத்திரமாக மீட்டனர். மேலும் இந்த விபத்தில் 25 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கடலோர காவல் படைத் தலைவர் அட்மிரல் முகமது ஜூபில் மாட் சோம் கூறுகையில், “11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 7 பேர் ஆண்கள். 4 பேர் பெண்கள். மேலும் 25 பேரில் நிலை என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்தோனேசிய தீவில் இருந்து கடற்பயணத்தை மேற்கொண்ட மேலும் 14 பேர் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த் துயர சம்பவத்திற்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய வேண்டாம் என்று புலம்பெயர்ந்தவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
காணாமல் போனவர்கள் தப்பியோடி மறைந்திருக்கலாம் அல்லது நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும் அவர்களை கண்டுபிடிக்க அதிகாரிகள் படகுகளையும் விமானத்தையும் அனுப்பியுள்ளனர்.
ஏழ்மையான பகுதிகளிலிருந்து மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரின் தாயகமாக உள்ளது மலேசியா. அவர்களில் பலர் ஆவணங்கள் இல்லாமல் இருக்கின்றனர். மேலும் அவர்கள் கட்டுமானம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட தொழில்களில் வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்