(Source: ECI/ABP News/ABP Majha)
விழுப்புரம் அருகே கழிவுநீர் கலந்த நீரைக் குடித்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி - அமைச்சர் பொன்முடி நேரில் ஆறுதல்
கண்டமங்கலம் அருகே கழிவுநீர் கலந்த நீரைக் குடித்து வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்த நவமால்மருதுார் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் புளியந்தோப்பு வழியே செல்லும் கழிவுநீர் கால்வாய் வழியே 1 கி.மீ தொலைவில் குளத்தில் கலக்கிறது. இந்த கால்வாய் நடுவே பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. இந்த நிலையில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்ததால் கடந்த 7 நாட்களாக அப்பகுதி மக்களுக்கு வாந்தி, பேதி மற்றும் உடல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட தமிழேந்தி, ஷியாமளா, சுப்பையா, ஜமுனா, பிரபு உட்பட 20க்கும் மேற்பட்டோர் ஜிப்மர், முண்டியம்பாக்கம், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கண்டமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ஆர்த்தி தலைமையிலான மருத்துவக் குழுவினர் அப்பகுதியில் குடிநீரை ஆய்வு செய்தனர். மேலும், குடிநீரில் கழிவுநீர் கலந்து பாதிக்கப்பட்ட பகுதியில் குடிநீர் வினியோகம் தடைசெய்யப்பட்டு, டேங்கர் லாரி மூலம் அப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் கண்டமங்கலம் ரயில்கேட் அருகில் நேற்றைய தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் பொன்முடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு புறப்பட்டு சென்றபோது அமைச்சரை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாகவே குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதாக புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை குற்றஞ்சாட்டினர். அதன் பின்பு அமைச்சர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நவமால் மருதூர் ஊராட்சி செயலாளர் வாசுதேவன் பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளதாக தெரிவித்தார்.