Villupuram : வானூர் டைட்டில் பார்க் திறப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினரை புறக்கணித்த மாவட்ட நிர்வாகம்
வானூர் புதிய டைட்டில் பார்க் திறப்பு விழாவில் எஸ்சி எம்.எல்.ஏ என்றால் அழைக்க கூடாதா? அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆதங்கம்
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் பகுதியில் 31 கோடி செலவில் புதிய டைட்டில் பார்க் கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருச்சிற்றம்பலத்தில், தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், டைடல் நியோ லிமிடெட் மூலம், மினி டைடல் பூங்காவினை திறந்து வைத்தார். தொழில், முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் டைடல் நியோ லிமிடெட் மூலமாக விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருச்சிற்றம்பலத்தில், ரூ 31.00 கோடி மதிப்பீட்டில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் 63,000 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது.
இக்கட்டடத்தில் சுமார் 450 முதல் 500 தகவல் தொழில் வல்லுநர்கள் பணிபுரிய குளிர்சாதன வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு மற்றும் மின் இயக்கி வசதிகள், மின்தூக்கி வசதிகள், உட்புற மற்றும் வெளிப்புற குடிதண்ணீர், சுகாதார வசதிகள், தீ பாதுகாப்பு மற்றும் கட்டட மேலாண்மை வசதிகள், மின் விளக்குகளுடன் கூடிய உட்புற சாலை வசதிகள், 24ஓ7 பாதுகாப்பு வசதிகள், உணவகம் மற்றும் உடற்பயிற்சிக்கூடம் உள்ளடக்கிய அனைத்து வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய டைட்டில் பார்க் கட்டிடத்தினை மாவட்ட ஆட்சியர் பழனி ஆய்வு மேற்கொண்டு இருந்தார், அப்போது அங்கு வந்த வானூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி இந்த டைட்டில் பார்க் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. விழுப்புரத்தில் அமைய இருந்த இந்த டைட்டில் பார்க்கினை எனது முயற்சியின் பேரில் இங்கு கொண்டு வந்து அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு கொடுத்தோம் ஆனால் தற்போது இந்த கட்டிடம் வேலை நிறைவடைந்து இன்று திறப்பு விழா நடைபெற உள்ளது இந்த நிகழ்ச்சிக்கு இப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினரான எனக்கு எந்த அரசு அதிகாரிகள் சார்பில் எந்த ஒரு தகவலும் கொடுக்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினார் பின்னர் அங்கிருந்து தன் ஆதரவாளருடன் வெளிநடப்பு செய்தார்.